உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.
''தமிழைப் படிச்சு என்ன செய்யப் போற? வேலை கிடைக்கற மாதிரி கணக்கோ, அறிவியலோ படி!'' - இது மாதிரியான அறிவுறுத்தல்களை நம்மில் பெரும்பாலானோர் பால்ய காலங்களில் கடந்து வந்திருப்போம். ஆனால் தமிழ் மொழித் தேர்வு அரசுப் பணிகளுக்கான கட்டாயத் தகுதித் தேர்வாக மாறி, தமிழ் வழியில் படித்தோருக்கான இட இதுக்கீடும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழ் படித்தவர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் மதிப்பீடு மற்றும் தகுதித் தேர்வாக இருப்பதால் அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இரண்டாவது தாள் திருத்தப்படும். பொது அறிவு எனப்படும் இரண்டாவது தாளில், அறிவியல், அரசியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட 9 பகுதிகளில் இருந்து மொத்தம் 75 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு (APTITUDE & MENTAL ABILITY TESTS) பகுதியில் இருந்து 25 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் இருக்கும். இவை அனைத்தையும் படித்தால்தான் 100 மதிப்பெண்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள முடியும்.
ஆனால் பொதுத் தமிழ் (General Tamil) அப்படியல்ல. தமிழை மட்டும் முழுமையாகப் படித்தாலே 100 கேள்விகளில் 95 கேள்விகளுக்காகவது சரியாக பதிலளிக்க முடியும். சரி, அதிக மதிப்பெண்களை அள்ளித் தரும் தமிழை எப்படிப் படிக்க வேண்டும்?
இதற்கான எளிமையான வழிகள் என்ன என்பது குறித்துப் பகிர்ந்துகொண்டார் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமியின் தமிழ் ஆசிரியர் தேன்ராஜ்.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள பொதுத்தமிழ் பாடத்திட்டத்தின்படி, பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள தலைப்புகளை (Topic) நன்கு கவனிக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ற விரிவான விளக்கங்களை பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்தும் பிற தமிழ் இலக்கிய- இலக்கண நூல்களில் இருந்தும் பெற வேண்டும். அவற்றை முழுமையாகப் படித்து முடிக்க வேண்டியது முக்கியம்.
தலைப்புக்கு ஏற்ற பதில்களை எங்கிருந்து பெற வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். இன்றைய சமச்சீர் பள்ளிப் பாடநூல்களில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகத்தைப் படிக்க வேண்டும். அதற்குப் பிறகு பழைய பாடப் புத்தகங்களையும் படிக்கலாம்.
இவை தவிர முனைவர் பாக்கியமேரி எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, டாக்டர் சோ.பரமசிவம் எழுதிய நற்றமிழ் இலக்கணம் ஆகிய புத்தகங்களைப் படித்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
எந்தப் பகுதியில் இருந்து அதிகக் கேள்விகள் வரும்?
தமிழ் பாடத் தேர்வுக்கு இலக்கணம், இலக்கியம் (செய்யுள், உரைநடை, கட்டுரை, கவிதை, கட்டுரை) என 2 பிரிவுகளில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பல போட்டித் தேர்வாளர்கள் கேட்கும் கேள்வி, இவற்றில் அதிகக் கேள்விகள் வரும் பகுதி எது? என்றுதான். இதற்கான விடை, "அப்படி ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் சுட்டிக் காட்டவில்லை" என்பதே.
சில தேர்வுகளில் உரைநடைப் பகுதியில் அதிக வினாக்கள் வந்துள்ளன. இலக்கணப் பகுதிகளில் இருந்து 40 வினாக்களும், சில தேர்வுகளில் 22 வினாக்களும் வந்துள்ளன. ஆகவே இந்த இந்தப் பகுதிகளில் இத்தனை வினாக்கள் வரும் என்பதில் எந்த வரைமுறையும் இல்லை. ஆகவே 2 பகுதிகளையும் சமமாக எண்ணிப் படிக்க வேண்டியது முக்கியம். எனினும் இலக்கணப் பகுதியை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை என்பதால், அதில் சுலபமாக மதிப்பெண்களை அள்ளலாம்.
அடிப்படையில் இருந்து கற்க வேண்டிய இலக்கணம்
தமிழ் பாடத்தில், இலக்கணப் பகுதி மிகவும் முக்கியமானது. இதில் இருந்து கேட்கப்படும் வினாக்கள் அனைத்துக்கும் பதிலளித்து, முழு மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு, முதலில் தமிழ் இலக்கணத்தை அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் பள்ளிப் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணத்தை அதற்குரிய சான்றுகள், உதாரணங்கள், எடுத்துக்காட்டுகளைக் கவனத்தில் கொண்டு படிக்கவேண்டும்.
அதேபோல எந்த ஒரு பாடத்தையும் தொடக்கத்தில் இருந்து, அதாவது ஏறுவரிசையில் படிக்கவேண்டும். அதாவது ஆறாம் வகுப்பு, பின்பு ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என்ற தொடர் நிலையில் படிப்பது நலம். முக்கியமாக இலக்கணப் பகுதியை குரூப் 4 பொதுத் தமிழ் இலக்கணப் பாடத்திட்டத்தின்படி படித்து, பலமுறை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கொண்டு படித்து, அதிகப் பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இலக்கணப் பகுதிகளில் முழு மதிப்பெண்களைப் பெற முடியும்.
பழைய தேர்வுத் தாள்களைப் படித்தல்
டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுத்தாள்களைச் சேகரிக்க வேண்டும். அவற்றில் கேட்கப்பட்டிருந்த பொதுத் தமிழ் வினாக்களுக்கான விடைகளைக் கண்டறிந்து படிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அதற்கான விளக்கங்கள் அல்லது விரிவான விடைகள் முழுவதையும் படித்து உணர்தல் வேண்டும். இதற்கு இணையான பிற கேள்விகளுக்கான விளக்கங்களையும் விடைகளையும் தெரிந்து வைத்திருத்தல் மிகவும் நல்லது.
இணைக் கேள்விகளும் பதிலும்
உதாரணமாக ஒரு கேள்வித் தாளில் தமிழ் மொழிக்குத் தொண்டுபுரிந்த வீரமாமுனிவர் பற்றி வினா இடம்பெற்றிருக்கும் என்றால் இதற்கான விடையைத் தெரிந்து கொள்வது அவசியம். அத்துடன் அதற்கு இணையாக ஜி.யு.போப் பற்றியும், கால்டுவெல், சீகன்பால்க், H.A.கிருஷ்ணபிள்ளை ஆகியோர் செய்த தமிழ்த் தொண்டு பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் அடுத்து வரும் தேர்வுகளில் இவர்களைப் பற்றி, கேள்விகள் வர வாய்ப்புள்ளது.
அதேபோல தமிழ்த் தொண்டு புரிந்த தமிழர் தேவநேயப் பாவாணர் பற்றிய கேள்வி வந்திந்தால், தமிழ்த் தொண்டு புரிந்த தமிழ் பெருஞ்சித்திரனார் பற்றியும் படிக்க வேண்டும். உரைநடை ஆசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை பற்றி கேள்வி வந்திருக்கும் என்றால் அவருக்கு இணையாக திரு.வி.க., மறைமலை அடிகளார், நா.மு.வேங்கடசாமி நாட்டார் பற்றிய கேள்விகள் அடுத்து வரலாம்.
தமிழக மகளிர் முத்துலட்சுமி ரெட்டி பற்றிய கேள்வி வந்திருக்கும் என்றால் இதற்கு இணையாக வேலுநாச்சியார், அசலாம்பிகை பற்றிய கேள்விகள் கேட்கப்படலாம்.
ஆய்வு செய்து விடையளித்தல்
விடைகளை எவ்வாறு நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பத்து சேர மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடப்படும் நூல் எது? என்ற கேள்விக்கு விடை பதிற்றுப்பத்து. இதற்கு இணையாக, பாண்டிய மன்னர்கள் பற்றிக் குறிப்பிடும் நூல் எது? சோழமன்னர்கள் பற்றி குறிப்பிடும் நூல் எது? கடையேழு வள்ளல்கள் பற்றிக் குறிப்பிடும் நூல் எது? சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிக் குறிப்பிடும் நூல் எது? என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேர்வர்களே தயார் செய்ய வேண்டும்.
மேலும் சங்க நூல்கள், மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்கள், சமண மற்றும் பௌத்த தமிழ் இலக்கியங்கள், சைவ மற்றும் வைணவ தமிழ் இலக்கியங்கள், கிறித்தவ மற்றும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், மரபுக் கவிதை, புதுக்கவிதை, புதினங்கள், சிறுகதைகள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் என்ற தலைப்புகளில் இருந்து தலா ஒரு வினா இடம்பெறும். அதேபோல செய்யுள், பாடல் வரிகளின் பொருள் உணர்ந்து ஒவ்வொரு வரியையும் முழுமையாகப் புரிந்துபடிக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டவற்றை முறையாகப் பின்பற்றிப் படித்தால் பொதுத்தமிழில் 100 கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து 150 மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம்.
பொதுத் தமிழ் பாடத்தைப் படிப்பது குறித்துப் பொதுவான அறிவுறுத்தல்களைப் பார்த்தோம். இலக்கணப் பகுதிக்குத் தனித்துவத்துடன் தயாராவது எப்படி?
- பார்க்கலாம்.
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?