TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசு குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

61 அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ன தகுதி? தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்கள் குறித்தும் இங்கே அறிந்துகொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசு குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 2026ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் 6ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு தேதிகள்
முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று காலை 9.30 முதல் 12.30 வரை நடைபெற உள்ளது. முதன்மைத் தேர்வு தேதிகள் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பத் திருத்தச் சாளரம்
இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளுக்குப் பின்னர், விண்ணப்பத் திருத்தச் சாளரம் 04.01.2026 முதல் 06.01.2026 வரை மூன்று நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
இக்காலத்தில் தேர்வர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய இயலும். விண்ணப்பத் திருத்தச் சாளரக் காலம் முடிந்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க தேர்வர்களுக்கு 26 வயது முடிந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 36 ஆகும். எனினும் நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்- 46,
முன்னாள் இராணுவத்தினர் – 50,
ஆதரவற்ற விதவை - உச்ச வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் முன் அனுபவ தகுதி
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பல்கலைக்கழகம்/ நிறுவனத்தால் வழங்கப்பட்ட இளநிலை சட்டத்தில் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வழக்குரைஞர் சங்கத்தில் (Bar Council) கட்டாயம் உறுப்பினராக இருப்பதோடு குற்றவியல் நீதிமன்றங்களில் முனைப்புடன் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் கட்டாயம் வழக்கு நடத்தியவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை- ஒருமுறைப் பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம்
தேர்வர்கள் www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பில் சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.
கூடுதல் தகவலைப் பெற https://tnpsc.gov.in/document/tamil/app_18_2025_tamil1.pdf என்ற அறிவிக்கையைக் காணலாம்.






















