Anna University Exams: தென் தமிழகத்தைத் தாக்கிய கனமழை: 5 மாவட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
வரலாறு காணாத கன மழையால் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கும் தென்மாவட்டங்களில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனிடையே, கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகரில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் எப்போது மீண்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை பல்கலைக் கழகம் மீண்டும் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
இதற்கிடையே கன மழை காரணமாக இன்று (டிச.18) நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்து உள்ளார்.
முடங்கிய ரயில் போக்குவரத்து
மேலும் கன மழை காரணமாக தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து முடங்கியது. சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயில் விருதுநகர், ராஜப்பாளையம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன் பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளத்தின் கீழ் உள்ள கற்களை மழை வெள்ளம் அரித்துச் சென்றதாலும், சில இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்ததாலும், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரலாறு காணாத பெரு மழையால் தலைநகர் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தென் தமிழகம் பாதிப்பைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.