10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம்
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் ஆக.28 வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:
2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) எற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பதிவு செய்வது எப்படி?
அனைத்து தனித் தேர்வர்களும் 10.08.2023 ( வியாழக்கிழமை) முதல் 21.08.2023 ( திங்கட்கிழமை) -க்குள் (விடுமுறை நாட்கள் நீங்கலாக) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலகத்தில் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்று பின்னர் இத்துறையால் தனித் தேர்வர்கள் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்களும் சேவை மையத்திற்கு (NODAL CENTRE) சென்று செய்முறைத் தேர்வு பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டு மற்றும் முன்பு தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து ஆன்லனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.
"பத்தாம் வகுப்பில் கருத்தியல் பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சிப் பெற்று அறிவியல் செய்முறைத் தேர்வை மட்டும் எழுதவுள்ள தனித்தேர்வர்கள், இத்துறையால் அறிவிக்கப்படும் நாட்களில் கருத்தியல் தேர்விற்கும் விண்ணப்பித்து, பதிவெண் பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட பதிவெண்ணை அப்பருவத்தில் எழுதவுள்ள செய்முறைத் தேர்விற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்."
80% வருகை கட்டாயம்
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80% வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கான விண்ணப்பப் படிவத்தினை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 10.08.2023 முதல் 21.08.2023 வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 21.08.2023- க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.