"இதான் உண்மையான கல்வி" - குறைதீர்ப்புக் கூட்டத்தைப் பார்க்க வந்த மாணவர்களை அதிகாரிகளாக மாற்றிய டி.ஆர்.ஓ!
மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை நேரில் பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்! முதியவரின் குறையை கேட்டு தீர்வு சொல்லுமாறு மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அன்பு கட்டளை!

திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை நேரில் பார்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் அங்கு வந்த முதியவரிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.
இந்த நிலையில், நாட்றம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் எவ்வாறு நடைபெறுகிறது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கை எடுத்து குறைகளைத் தீர்த்து வைக்கின்றனர் என்பதை நேரில் அறிந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது மாணவர்களைச் சந்தித்த மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின் செயல்பாடுகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும் விதம், அவற்றின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து, மனு அளிப்பதற்காக வந்திருந்த முதியவர் ஒருவரைச் சுட்டிக்காட்டிய மாவட்ட வருவாய் அலுவலர், மாணவர்களிடம், "இந்த முதியவர் எதற்காக மனு கொடுக்க வந்துள்ளார், அவருடைய குறை என்ன என்பதை நீங்களே கேட்டறியுங்கள்" என அன்புடன் அறிவுறுத்தினார்.
இதையடுத்து மாணவ, மாணவிகள் அந்த முதியவரிடம் சென்று அவரது கோரிக்கையைக் கேட்டறிந்தனர். மேலும், அவரது பிரச்சினைக்கான தீர்வு என்னவாக இருக்க முடியும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விளக்கமளித்தார்.
புத்தகங்களில் மட்டுமே படித்து அறிந்துகொள்ளும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் முறையையும் நேரில் பார்வையிட்ட மாணவர்களுக்கு இந்த அனுபவம் புதிய புரிதலை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.
மக்களின் குறைகளைக் கேட்பது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறையினருக்கும் மக்கள் சேவை மற்றும் அரசு நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் மாணவர்களுக்கு வழங்கிய இந்த அன்பு அறிவுரை அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
ட்ரெண்டிங் செய்திகள்





















