Teachers Strike: ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; பணி நிரந்தரம்- அமைச்சர் அன்பில் அதிரடி அறிவிப்பு- முழு விவரம்
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மூவர் குழு நியமிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மூவர் குழு நியமிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நுங்கம்பாக்கம், டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
’2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் அளிக்க வேண்டும்’ என்று கோரி, டெட் ஆசிரியர்கள் சங்கம் போராடி வருகிறது.
சம வேலைக்கு சம ஊதியம்
இதற்கிடையே சுமார் 20 ஆயிரம் பேரைக் கொண்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் ஆசிரியர்கள், தங்களின் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
பணி நிரந்தரம்
முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கமும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கமும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மூவர் குழு
’’சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். 3 மாதத்துக்குள் இந்தக் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். பள்ளிக் கல்வித்துறைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
அதேபோல பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். தற்போது 10,359 சிறப்பு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியிலும் ஊதியம் உயர்த்தப்பட உள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரூ.10 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
பணி நிரந்தரம்
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53-ம், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தெரிவு சார்ந்து பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுவதால் அவர்கள் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும். முதல்வர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே ஆசைப்படுகிறார். நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் மீதும் முதல்வரின் மீதும் நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.