TN Schools Reopen | அவசரம் ஏன்?- 1 - 9ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பை ஒத்திவையுங்கள்- அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக, அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்?
1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்த சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில், வகுப்புகள் தொடங்கப்பட்டன. நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட்டு இயங்கி வந்தன. கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து, பள்ளிகள் 8ஆம் வகுப்பு வரை மூடப்பட்டு, பின்பு 12ஆம் வகுப்பு வரையிலும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன.
தமிழ்நாடு மட்டுமல்லாது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழ்நாட்டில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக ஜன.27 அன்று அறிவிப்பு வெளியானது.
அதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின. அதேபோல இன்று முதல் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியையோ, மனநிறைவையோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும்தான் ஏற்படுத்தியிருக்கிறது!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கலாம். ஆனால், திரும்பிய திசையெல்லாம் கொரோனா பாதிப்பைப் பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் பள்ளிகளைத் திறந்து, தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது!
பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள்தான் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக, அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்?
பொதுத் தேர்வைக் கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அதற்கான தேவையில்லை. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும்.''
இவ்வாறு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )