TN Employment Exchange: தமிழகத்தில் வேலைக்கு முன்பதிவு செய்து காத்திருக்கும் 73.99 லட்சம் பேர்; என்ன காரணம்?
2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலமே நிரப்பப்பட்டன.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன் பதிவு செய்துவிட்டு 73.99 லட்சம் பேர் அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 34,53,380 ஆண்கள், 39,45,861 பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73,99,512 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல்:
18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 23 லட்சத்து ஆயிரத்து 800 பேர் பதிவு செய்து உள்ளனர். அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 29 லட்சத்து 88 ஆயிரத்து ஒருவரும் முன் பதிவு செய்து உள்ளனர். 31 முதல் 45 வயது வரை அரசுப் பணிக்காகப் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 68 ஆயிரத்து 931 பேர் ஆக உள்ளது.
அதேபோல, 46 முதல் 60 வயது வரை வயது முதிர்ந்த நபர்கள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 190 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 590 பேரும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடைய ஆண்கள் 72 ஆயிரத்து 983 பேரும், பெண்கள் 37 ஆயிரத்து 843 பேரும் காத்திருக்கின்றனர். இவர்கள் மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 826 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ஆயிரத்து 47 பேரும், பெண்கள் 5 ஆயிரத்து 449 பேர் உள்பட 17 ஆயிரத்து 496 பேரும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 477 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 493 பேர் உள்பட 13 ஆயிரத்து 970 பேர் பதிவு செய்துள்ளனர். அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 704 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 60 ஆயிரத்து 938 நபர்கள் என மொத்தம் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 நபர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
என்ன காரணம்?
தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ள நிலையில், பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான நபர்கள் உயர் கல்வியை முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமே நிரப்பப்பட்டன. குறிப்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பதிவு மூப்புப் பட்டியல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.
எனினும் தற்போது போட்டித் தேர்வுகள் மூலமும் பொது அறிவிப்புகள் மூலமுமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வே இல்லாமல் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் இடங்கள் கூட பொது அறிவிப்பு மூலம் நிரப்பப்படுகின்றன. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக முன்பதிவின் தேவை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது.
இந்த நிலையில் சுமார் 74 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.