SSC CGL 2025: எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வு மீண்டும் ரத்து; தவிப்பில் தேர்வர்கள்- என்ன நடந்தது?
SSC CGL 2025 Exam: 2025ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வுக்கு 28.14 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்தத் தேர்வு 129 நகரங்களில் 260 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக இருந்தது.

எஸ்எஸ்சி சிஜிஎல் டயர் 1 தேர்வு எவ்விதக் குழப்பமும் முறைகேடும் இன்றி சீராக நடக்கும் என்று ஆட்சேர்ப்பு வாரியம் உறுதி அளித்ததை மீறியும், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேர்வில் குளறுபடி நடந்துள்ளது. இதனால் பல்வேறு தேர்வு மையங்களில், தேர்வு ரத்து செய்யப்பட்டது.
எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வு நடத்தப்படுவதாக இருந்த வட கிழக்கு மற்றும் கிழக்கு பிராந்திய தேர்வு மையங்களில், கணினி கோளாறு, தாமதமான லாகின்கள், தவறான மேலாண்மை காரணமாக ரத்து செய்யப்பட்டது. செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த தேர்வு
2025ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வுக்கு 28.14 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்தத் தேர்வு 129 நகரங்களில் 260 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
டெல்லி என்சிஆர், குருகிராம், ஜம்மு, கான்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை எஸ்எஸ்சி கிழக்குப் பிராந்திய இயக்குநர் உறுதிப்படுத்தி உள்ளார்.
அனைத்து ஷிஃப்ட் தேர்வுகளும் ரத்து
ஜம்முவில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து ஷிஃப்ட் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட கிழக்குப் பிராந்தியம் அறிவித்து இருந்தது.
இதை முன்னிட்டு தேர்வர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கத் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதற்கு ஆணையத்தின் மோசமான நிர்வாகமே காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அதிகரித்து வரும் குரலுக்கு பதிலளிக்கும் விதமாக SSC தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ’’புதிய தேர்வு நடத்தும் நிறுவனத்தின் (ECA) மையங்கள் குறைவாக இருந்ததால், இந்த ஆண்டு தொலைதூர தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன’’ என்று தெரிவித்துள்ளார்.
புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு
இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் CGL Tier-1 தேர்வுக்கு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி செப்டம்பர் 22 முதல் 27, 2025 வரை , புதிய தேர்வுகள் நடைபெறும் என்று எஸ்எஸ்சி தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://ssc.nic.in/






















