Secretariat Changing: தலைமை செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்திற்கு இடமாற்றம் செய்க: வலுக்கும் கோரிக்கை...! என்ன செய்யப்போகிறது அரசு?
தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி, பாதுகாப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு, ஓமந்தூரார் வளாகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.
![Secretariat Changing: தலைமை செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்திற்கு இடமாற்றம் செய்க: வலுக்கும் கோரிக்கை...! என்ன செய்யப்போகிறது அரசு? Space crunch, insecurity... Relocation of TN Secretariat- TN Secretariat Association urges Secretariat Changing: தலைமை செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்திற்கு இடமாற்றம் செய்க: வலுக்கும் கோரிக்கை...! என்ன செய்யப்போகிறது அரசு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/14/8b5bd6eb34d5ebc6527aceb0fadee4941692010924188332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் இட நெருக்கடி, பாதுகாப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு, ஓமந்தூரார் வளாகத்திற்கு தலைமைச் செயலகத்தினை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி என்பது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக தலைமைச் செயலக பழைய கட்டடத்தில் பணியாளர்கள் எளிதாக நடமாட முடியாத நிலை உள்ளது. தீ விபத்துகள் ஏற்பட்டால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. இதை எல்லாம் தவிர்க்கும் வகையில், முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கனவு தலைமைச் செயலகமான, ஓமந்தூரார் வளாகத்திற்கு தலைமைச் செயலகத்தினை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் விரைந்து எடுத்திட வேண்டும் என கடந்த 19-01-2023 அன்று நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது தலைமைச் செயலக பழைய கட்டிடத்தில் இட நெருக்கடி என்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. மேலும், பணியாளர்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதும் மிகவும் சிரமமாக உள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் நாமக்கல் கவிஞர் மாளிகையின் உறுதித் தன்மை என்பது கேள்விக் குறியாக உள்ளது. சில தளங்களில் மேற்புறப் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுவது நிகழ்ந்தவண்ணம் உள்ளது. அனைத்துத் தளங்களிலும் மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைக்கப்பட்டு, அசுத்தக் காற்று வெளியேறுவதற்கான முறையான அமைப்புகள் இல்லாது, அக்கட்டிடத்திற்கு குளிர்சாதன வசதி அளிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரமற்ற நிலை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது கனவுத் திட்டடமான தலைமைச் செயலகத்தினை ஓமந்தூரார் வளாகத்தில் அமைத்தார். ஆனால், அவரது கனவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, அவரின் கனவினை நனவாக்கும் வாய்ப்புஎன்பது உருவாகியுள்ளது.
தலைமைச் செயலகப் பணியாளர்களின் நலனையும் அமைச்சர்கள்-சட்டமன்ற உறுப்பினர்களின் நலனையும் பொது மக்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தினை எளிதில் அணுகக்கூடிய வகையிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமைச் செயலகக் கனவினை நிறைவேற்றும் வகையிலும், உடனடியாக தலைமைச் செயலக வளாகத்தினை அரசினர் தோட்ட வளாகத்திலுள்ள ஓமந்தூரார் கட்டடத்திற்கு இட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக கொள்கிறோம்’’.
இவ்வாறு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)