IIT Madras | உதவித்தொகையுடன் ஐஐடி சென்னையில் ஆன்லைன் படிப்பைப் படிக்கலாமா?
ஐஐடி சென்னையில் பிஎஸ்சி ஆன்லைன் படிப்பைப் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் 100 பேருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ரெனால்ட் நிசான் (RNTBCI) நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஐஐடி சென்னையில் பிஎஸ்சி பட்டப்படிப்பை படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் 100 பேருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ரெனால்ட் நிசான் (RNTBCI) நிறுவனம் தொடங்கியுள்ளது.
ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் சென்டர் நிறுவனத்தின் பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு நிதியின் (சிஎஸ்ஆர்) கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நாட்டிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடி சார்பில் ஆன்லைன் பட்டப்படிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி பிஎஸ்சி படிப்பு இணைய வழியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்பு (B.Sc. Degree in Programming and Data Science) மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது.
1. அடிப்படைப் பட்டம் (Foundation programme),
2. டிப்ளமோ பட்டம் (Diploma programme),
2. இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme).
இந்தப் பட்டப்படிப்பின் மூன்று நிலைகளில் எந்தவொரு கட்டத்திலும் மாணவர்கள் வெளியேற முடியும், அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி மெட்ராஸில் இருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் கிடைக்கும்.
படிக்க என்ன தகுதி?
12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் கல்லூரிகளில் வேறு இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் மற்றும் பணியில் இருப்போரும் இந்தப் பட்டப்படிப்பில் இணையத் தகுதியானவர்கள் ஆவர்.
பிற கல்லூரிகளில் வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், படிப்புகளை மாற்றத் தேவையில்லாமல் இந்தப் பட்டப்படிப்பைத் தொடர முடியும்.
ஆர்வமுள்ளவர்கள் ஐஐடி சென்னை தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து, தகுதித் தேர்வுக்கு ரூ.3000 கட்டணம் செலுத்த வேண்டும்.
படிப்பு எப்படி?
மாணவர்களுக்கு 4 பாடங்களில் (கணிதம், ஆங்கிலம், புள்ளிவிவரம் மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை) 4 வாரப் பாடநெறி உள்ளடக்கம் உடனடியாக அனுப்பிவைக்கப்படும். இந்த மாணவர்கள் இணையத்தில் பாட விரிவுரைகளைக் கற்பதுடன், இணையத்தின் வாயிலாகவே தங்கள் கல்விப் பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும்
மேலும் 4 வாரங்களின் முடிவில் தகுதித் தேர்வை எழுத வேண்டும். ஒட்டுமொத்த மதிப்பெண் 50 சதவீதத் தேர்ச்சியுடன் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் அடிப்படைப் பட்டத்திற்குப் (foundation programme) பதிவு செய்யத் தகுதியுடையவர்கள்.
இந்நிலையில் ஐஐடி சென்னையில் பிஎஸ்சி ஆன்லைன் படிப்பைப் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் 100 பேருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ரெனால்ட் நிசான் (RNTBCI) நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தேபாஷிஸ் நியோகி கூறும்போது, சரியான நேரத்தில் சரியான கல்வி என்பது எந்தவொரு மாணவருக்கும் இன்றியமையாதது. ஐஐடி சென்னையில் பிஎஸ்சி படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் 100 பேர் தங்களின் கனவை நனவாக்கக் கைகோப்பதில் பெருமை கொள்கிறோம்.
ரெனால்ட் நிசானைப் பொறுத்தவரை, சிஎஸ்ஆர் நிதியின் கீழ் பல்வேறு சமுதாய வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளைத் தருவதில் உறுதியுடன் உள்ளோம். வாழ்க்கையின் அனைத்துக் கோணங்களிலும் தரவு அறிவியலின் முக்கியத்துவத்தை ஒதுக்கிவிட முடியாது. மாணவர்களின் ஆற்றல், ஐஐடி சென்னையில் பயன்படுத்தப்பட்டு, அவர்களை தொழில்துறையின் குறிப்பிடத்தக்க நபர்களாக மாற்றும் என்று நம்புகிறோம் என்று தேபாஷிஸ் நியோகி தெரிவித்துள்ளார்.