பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
cதேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.

மாணவர்களின் மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும், போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 2026-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கலந்துரையாடினார்.
அப்போது ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறைகள், அனுபவங்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் அணுகுமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மொபைல் பயன்பாட்டைக் குறைத்தல்
குழந்தைகளிடம் திரையைப் பார்க்கும் ஸ்க்ரீன் டைம் பழக்கம் அடிமைத்தனமாக மாறிவிட்டதாகக் கவலை தெரிவித்த பிரதமர், அதைக் குறைக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றார். இதனைக் குறைத்தால், வீடியோ கேம்களில் அல்லாமல், மைதானத்தில் விளையாடும் வெளிப்புற விளையாட்டுகளில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். பள்ளிகள் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
போதைப்பொருள் விழிப்புணர்வு
தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கம் ரகசியமான ஒன்றல்ல எனக் கூறிய அவர், இது குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். மாணவர்களிடம் ஏற்படும் பயம் மற்றும் நடத்தை மாற்றங்களைக் கண்காணிக்க வேண்டும்.
"பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களைத் தாண்டி மாணவர்களின் வாழ்க்கையோடு ஆசிரியர்கள் ஒன்றிணைய வேண்டும். மாணவர்களின் குழந்தைத் தன்மையை சாகவிடாமல் காப்பதே ஆசிரியர்களின் முக்கிய கடமை" என்றார்.
ஏகலைவா பள்ளிகள்
படிப்பில் பின்தங்கிய மாணவர்களின் பிற திறன்களைக் கண்டறிகிறீர்களா எனப் பிரதமர் கேட்டார். இதற்குப் பதிலளித்த ஆசிரியர்கள், ஒவ்வொரு மாணவரின் தனித்துவமான திறன்களையும் சவால்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதாகக் கூறினர். ஒரு ஆசிரியை பேசுகையில், ஏகலைவா மாதிரி உண்டுவிடப் பள்ளிகள் மூலம் பள்ளிக்கூடத்தையே பார்த்திராத முதல் தலைமுறை மாணவர்கள் கூட இன்று ஐஐடி, என்ஐடி மற்றும் மருத்துவப் படிப்புகளை நோக்கிப் பயணிப்பதாகக் கூறி பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் குறித்துப் பெண்கள் பேசத் தயங்குவது பற்றி ஆசிரியை ஒருவர் தனது ஆய்வைப் பகிர்ந்தார். இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, காசி நாடாளுமன்ற உறுப்பினராக, தான் அங்கு எடுத்த விழிப்புணர்வு முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார். முன்பை விடத் தற்போது பெண்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















