2.05 கோடி மாணவர்கள், 15 லட்சம் பெற்றோர்களை ஜன.29-ல் சந்திக்கும் பிரதமர் மோடி; இதுதான் காரணம்!
பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனவரி 29ஆம் தேதி பிரதமர் மோடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைச் சந்திக்கிறார்.
பள்ளி மாணவர்களின் தேர்வு பயம் போக்குவது, ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கலந்துரையாடும் வகையில், ஆண்டுதோறும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக நடத்தப்படும் "பரிக்ஷா பே சார்ச்சா" என்ற நிகழ்ச்சி (Pariksha Pe Charcha - PPC 2024) ஜனவரி 29ஆம் தேதி நடைபெற உள்ளது.
அது என்ன பரிக்ஷா பே சார்ச்சா?
2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 7ஆவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.
அதேபோல ஆசிரியர்கள், பெற்றோர்களும் இதில் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் தனியாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
500 வார்த்தைகளுக்கு மிகாமல், மாணவர்கள் தங்களின் கேள்விகளைப் பிரதமர் மோடிக்கு அனுப்பலாம். மாணவர்கள் ஜனவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். 205.62 லட்சம் அதாவது 2.05 கோடி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
குறிப்பாக 181 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் விண்ணப்பித்து உள்ளனர்.
நிகழ்வு குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் கூறும்போது, ’’மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே..! 2024ஆம் ஆண்டுக்கான #ParikshaPeCharcha போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரும் ஆவலுடன் காத்திருக்கும் பிரதமர் உடனான உரையாடலுக்கான நேரம் இது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் நம் மாணவர்களுக்கு ஆதரவான சமூகத்தை உருவாக்குவோம். தேர்வுகளை வாழ்க்கையின் திருவிழாவாகக் கொண்டாடும்’’ என்று தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் https://innovateindia.mygov.in/ppc-2024/என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து விண்ணப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2050 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போட்டிகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி சார்ந்த பொருட்களை பரிசாகப் பெறுவர்.
இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://innovateindia.mygov.in/ppc-2024/