பெற்றோர்களே உஷார்: உதவித்தொகை அளிப்பதாக மோசடி செய்யும் கும்பல்- பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
10, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபட்டது சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துக- கல்வித்துறை
பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபடுவோர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது:
’’தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மாணவ மாணவியர்களின் நலனுக்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்விப் பாடப்பிரிவில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (Internship) அளிக்கப்பட்டு வருவதாகவும், அகப்பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ரூ.1000/- ஊக்கத்தொகை மாணவ- மாணவியரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் விதம், மாணவ மாணவியர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே ஆதார் வழங்கும் விதமாக ஆதார் பதிவு என்ற சிறந்த திட்டத்தின் மூலம் புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து செயல்படுத்த உள்ளது.
உதவித்தொகை வழங்குவதாக மோசடி
இவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனை சாதகமாக பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களின் வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் செயலில் திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.
மேற்படி மோசடியில் ஈடுபடுபவர்கள் கல்வித் துறையில் இருந்து ஊக்கத்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அணுகி அவர்களுக்கு ஆன்லைன் வாட்ஸ் ஆப் மூலம் QR Code அனுப்பி அதனை ஸ்கேன் செய்தால் உதவித்தொகை (Sholarship) கிடைக்கும் என போலியான செய்திகளை பரப்பி அவர்களை ஏமாற்றி அவர்கள் வங்கி கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துள்ளதாகத் தெரிவதாகவும் மேற்படி மோசடி கும்பலிடம் ஏமாந்தது குறித்து 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 10 நபர்கள் மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் மனு அளித்துள்ளதாகவும் பலர் தாங்கள் ஏமாந்தது குறித்து புகார் அளிக்காமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியில் ஊக்கத்தொகை குறித்து யாரும் பேசமாட்டார்கள்
மோசடி கும்பலிடம் பெற்றோர்கள் மேலும் பணத்தை இழப்பதைத் தடுக்கும் வகையில் பள்ளியில் பெற்றோர்களுக்கு நடத்தும் கூட்டத்தின்போது ஊக்கத்தொகை தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு அரசு தரப்பில் யாரும் பேசமாட்டார்கள் என்றும் போனில் தொடர்பு கொள்பவர்களிடம் வங்கி தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்க வேண்டும்’’.
அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொழிற்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.