நிபா வைரஸ் எதிரொலி: மாஹேவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் செப்.24 வரை விடுமுறை நீட்டிப்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மாஹே பிராந்தியத்தின் அருகில், கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் ( Nipah Virus ) அதிகம் பாதித்த கோழிக்கோடு மாவட்டம் உள்ளது. ஆகவே அங்கிருந்து புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்திற்கு நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால் புதுச்சேரி அரசு, எல்லைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள் வெளியீடு
இதனிடையே மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளைக் கழுவ வேண்டும், சானிட்டைசர் பயன்படுத்த வேண்டும், வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாஹே பிராந்திய நிர்வாகம் வெளியிட்டது. புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின் பேரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாஹே பிராந்தியத்தில் நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தி இருந்தார். மாஹே பிராந்தியத்திற்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டது.
விடுமுறை நீட்டிப்பு
தொடர்ந்து நிபா வைரஸ் ( Nipah Virus ) பரவல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, செப். 16, 17 தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்த விடுமுறை செப். 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ்: சில தகவல்கள்
நிபா வைரஸ் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவரிடம் தொடுதல் மூலமாக எளிதில் பரவக்கூடிய அபாயங்கள் இருப்பதால், நிபா வைரசால் உயிரிழந்தவர்களின் முகங்களை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நிபா வைரசினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு முன்பும் குளிப்பாட்டும் போதும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகளும், பிரத்யேக மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
நோயாளியிடம் இருந்து இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை நன்றாக சோப்புகளால் அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இந்த வைரசை மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளி மாதிரிகளில் இருந்தும், ரத்தம் மற்றும் சிறுநீரில் இருந்தும் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படும்.