National Education Policy: புதிய கல்விக்கொள்கை முழுமையாக ரத்து செய்யப்படும்: கர்நாடக அரசு அறிவிப்பு- மத்திய அரசு கண்டனம்
மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக்கொள்கை கர்நாடகத்தில் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
![National Education Policy: புதிய கல்விக்கொள்கை முழுமையாக ரத்து செய்யப்படும்: கர்நாடக அரசு அறிவிப்பு- மத்திய அரசு கண்டனம் NEP Karnataka Government Will Cancel National Education Policy Says Deputy CM DK Shivakumar National Education Policy: புதிய கல்விக்கொள்கை முழுமையாக ரத்து செய்யப்படும்: கர்நாடக அரசு அறிவிப்பு- மத்திய அரசு கண்டனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/18/c5fc754ec106158141c1a5ca2f9f6c371692360877597332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக்கொள்கை கர்நாடகத்தில் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக இதுகுறித்து எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் சிவகுமார் கூறும்போது, ’’அதிகாரத்துக்கு வந்தபிறகு தேசிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம். குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தாத சூழலில், கர்நாடகாவில் மட்டும் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய அவசரம் என்ன?
நாட்டிலேயே கர்நாடகாவின் கல்வி முறை முன்மாதிரியாகத் திகழ்கிறது. அதனால்தான் இன்று ஐடி தலைநகராக பெங்களூரு உள்ளது. எங்களுடைய கல்வி அமைப்பின் காரணமாகவே, மாநிலத்தில் இருந்து ஏராளமான மக்கள், வெளிநாடுகளில் உயர் பதவிகளில் பணியில் உள்ளனர்.
அடுத்த கல்வி ஆண்டில் முழுமையாக ரத்து
பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, கர்நாடக மாநிலத்தில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்படும்.
போதிய தயாரிப்புகளுக்குப் பிறகு, தேசிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும். தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசு அமைக்கப்பட்டபோது ஏற்கெனவே கல்வி ஆண்டு தொடங்கி இருந்தது. ஆண்டின் நடுவில், கல்விக் கொள்கையை ரத்து செய்து மாணவர்களை சிரமப்படுத்தக்கூடாது என்பதாலும் இந்த ஆண்டு, கல்விக் கொள்கை மாற்றமின்றி அப்படியே தொடரும்’’ என்று துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மாநிலத்துக்கு தனி கல்விக் கொள்கை
முன்னதாக கடந்த ஜூலை மாதம் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) பதிலாக மாநிலப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில கல்விக் கொள்கையை (SEP) கர்நாடகாவில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு புதிய கல்வி கொள்கையை வெளியிட்டது. அந்தக் கல்வி கொள்கையை தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. கடந்த பாஜக ஆட்சியில், நாட்டிலேயே முதல்முறையாக 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகாவில் புதிய கல்வி கொள்கை அமல் செய்யப்பட்டது. எனினும் 2023 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. சித்தராமையா கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்.
மத்தியக் கல்வி அமைச்சகம் கண்டனம்
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முடிவு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’’காங்கிரஸ் கட்சி கல்வியில் அரசியல் செய்யக்கூடாது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவு. கல்வி முறை வளர்ச்சி அடைய வேண்டுமே தவிர, பின்னடைவைச் சந்திக்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)