NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
NEET UG 2026 Paper Leak: 2026ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட நிலையில், முறைகேடு நடந்ததாகக் கூறி தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த முறைகேடு நடந்திருந்தாலும் முதல் முறையாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
ஏற்கெனவே 2026- 27ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80%க்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாகவும் தகவல் வெளியானது.
உத்தேச வினாக்கள் தொகுப்பு என்ற பெயரில் கைகளால் எழுதப்பட்ட 410 வினாக்கள் கொண்ட ஆவணம், நீட் தேர்வுக்கு 15 முதல் 30 நாள்களுக்கு முன்பாகவே மாணவர்களிடம் பரவியதாகவும், தேர்வுக்கு 42 மணி நேரம் முன்பாக வாட்ஸ் அப் மூலம் ராஜஸ்தான் மற்றும் பிற வட மாநிலங்களில் மின்னல் வேகத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒட்டுமொத்தமாகவே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது.
In continuation of its press release dated 10 May 2026, the National Testing Agency wishes to inform candidates, parents, and members of the public of the following decisions taken in respect of NEET (UG) 2026. NTA had, on 8 May 2026, referred the matters then under consideration…
— National Testing Agency (@NTA_Exams) May 12, 2026
மறு தேர்வு எப்போது? எப்படி?
ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு மறுதேர்வு மீண்டும் நடத்தப்படும், எனினும் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் மறுதேர்வுக்கு அப்படியே எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த மறு தேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவோ, விண்ணப்பக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. ஏற்கெனவே செலுத்திய கட்டணமும் திருப்பித் தரப்படும்.
தேர்வர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நீட் தேர்வு குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளைப் பெறலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு : neet-ug@nta.ac.in
தொலைபேசி எண்கள்: 011-40759000 / 011-69227700
ட்ரெண்டிங் செய்திகள்






















