NEET (UG) 2021 Date: செப்.12ல் நீட் தேர்வு; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
கொரோனா காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற இருந்து நீட் தேர்வு 2021 ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று நேரத்தில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பொதுத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நீட்" போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று கருத்து தெரிவித் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," நடப்பாண்டில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலே மருத்துவ கல்வியில் சேர்வதற்கு அனுமதிக்க வேண்டும்"என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி நாடு முழுவதும் 2021 செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
The NEET (UG) 2021 will be held on 12th September 2021 across the country following COVID-19 protocols. The application process will begin from 5 pm tomorrow through the NTA website(s).
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 12, 2021
கொரோனா காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டு இருந்த 3,862 தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் இந்த முறை அதிகரிக்கப்படும் என்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
In order to ensure social distancing norms, number of cities where examination will be conducted has been increased from 155 to 198. The number of examination centres will also be increased from the 3862 centres used in 2020.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 12, 2021
கொரோனா விதிகளின் அடிப்படையில் தேர்வு எழுதவரும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு மையங்களில் முக கவசம் வழங்கப்படும் என்றும், தேர்வு நடைபெறும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
To ensure adherence to COVID-19 protocols, face mask will be provided to all candidates at the centre. Staggered time slots during entry and exit, contactless registration, proper sanitisation, seating with social distancing etc. will also be ensured.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 12, 2021
நீட் தேர்வில் பொதுவாக மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். (இயற்பியியல், வேதியியல் தலா 45 கேள்விகள், உயிரியல் - 90 கேள்விகள்) கேட்கப்படும். எனவே, மாணவர்கள் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கேள்விகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.