Neet PG Cutoff: ஜீரோ மார்க் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம்... மத்திய அரசு திடீர் அறிவிப்பு!
நீட் முதுநிலை தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.
Neet PG Cutoff: நீட் முதுநிலை தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. இனி ஜீரோ மதிப்பெண் எடுத்துவர்களும் நீட் முதுநிலை கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு:
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் இளநிலை தேர்வில் (Neet UG) தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். அதன்படி, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான 2023-24 தேர்வு கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் மார்ச் 14ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்வை என்.பி.இ. எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. பொதுவாக நீட் முதுநிலை தேர்வு 800 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கட்-ஆஃப் மதிப்பெண்கள்:
அதாவது, நாடு முழுவதும் எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கு 800 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில், பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (EWS) 291 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளுக்கு 274 மதிப்பெண்ணும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள் உட்பட) 257 மதிப்பெண் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிபெண் (Cut Off Percentile) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோ(0) எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
Zero percentile cut off for NEET PG admissions, and so many doctors went berserk when Sonali Bendre spoke about second opinion from MSKCC for cancer treatment. It may be unaffordable for many. That's a different thing. Buy we as a system are nowhere compared to countries which… pic.twitter.com/6eaDaKIPbW
— Dr Deepak Krishnamurthy (@DrDeepakKrishn1) September 20, 2023
இதுகுறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழ வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் முதுநிலை படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண் என்பது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் விருப்பங்களை திருத்திக் கொள்ளலாம். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 3வது சுற்று கலந்தாய்விற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம்:
மத்திய அரசு இடங்களுக்கு கடந்த ஜூலை 27ஆம் தேதி நீட் முதுநிலை கலந்தாய்வு தொடங்கியது. 3 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் சுற்று முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை. இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.