NMMS Scholarship Scheme: 4 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ரூபாய் 1000 உதவித்தொகை; பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- எப்படி..?
2023ஆம் ஆண்டு என்எம்எம்எஸ் தேர்வுக்கு எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
என்.எம்.எம்.எஸ். தேர்வு எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் 2023ஆம் ஆண்டு தேர்வுக்கு எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
உதவித்தொகை:
இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த நிலையில், 2022-2023 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு, 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதாவது:
தேர்வுகள்
''2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2023 பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி பற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய, https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
பதிவிறக்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோவுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 24.01.202 ஆகும்.
மேலும் https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.