Madras University: பழம்பெருமை வாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு ஏ ++ அந்தஸ்து; வழங்கியது யுஜிசி
Madras University Grade: நாட்டின் பழம்பெருமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ஏ ++ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. யுஜிசி சார்பில் தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழு (நாக்) இதை வழங்கியுள்ளது.
நாட்டின் பழம்பெருமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ஏ ++ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. யுஜிசி சார்பில் தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழு (நாக்) இதை வழங்கியுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது.
இந்த சூழலில் பிறகே தொழில்முறைப் படிப்புகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பல்கலைக்கழகங்கள் செயல்படத் தொடங்கின. இதைத்தொடர்ந்து கலை, இளங்கலை, முதுகலை, பிஎச்.டி. உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் 131 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அந்த வகையில் ஆண்டுதோறும் ஏழை மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து, இலவசமாக இளங்கலைப் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
நாக் தர மதிப்பீடு
நாட்டில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், தங்களுடைய கற்பித்தல் தரத்தை மதிப்பீடு செய்யும் வகையில் National Assessment and Accreditation Council எனப்படும் தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழுவிடம் (நாக்) தர மதிப்பீட்டைப் பெற வேண்டும். கல்வி நிறுவனங்களின் கற்பித்தல், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, நிா்வாகம், சமூகப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த மதிப்பீடு வழங்கப்படுகிறது.
தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு ஏ ++ அந்தஸ்து வழங்கப்படும். அந்த வகையில் தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு, ஏ ++ நாக் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு சி.ஜி.பி.ஏ. எனப்படும் தரமதிப்பீட்டில், 4-க்கு 3.59 கிடைத்துள்ளது. 3.51-ஐ விட அதிக கிரேடு பெறும் நிறுவனங்களுக்கு, முதல் தரமான ஏ++ வழங்கப்படுகிறது. நாக் மதிப்பீட்டின் ஏழு அம்ச மதிப்பெண்களில், சென்னைப் பல்கலை.யின் உள்கட்டமைப்புக்கு அதிகபட்சமாக, 3.85 சிஜிபிஏ கிடைத்துள்ளது. பாடத்திட்டத்துக்கு 3.8, கற்றல், கற்பித்தல், மதிப்பீட்டுக்கு 3.67, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புக்கு 3.48, நிர்வாகம், தலைமை, மேலாண்மை 3.4 சிஜிபிஏ மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.
முன்னதாக 7 பேர் கொண்ட மத்திய, மாநில அரசுகளின் பேராசிரியர்கள் கொண்ட குழு, பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வு நடத்தியது. இதைத் தொடர்ந்து தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு, ஏ ++ நாக் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
அண்மையில்தான் சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வு 2023- 24 ஆம் கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.