IIT Madras: வரலாற்றில் முதல்முறை: விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை - என்ன தகுதி? ஒதுக்கீடு எப்படி?
சென்னை ஐஐடியில் துறைக்கு 2 இடங்கள் வீதம், ஆண்டுக்கு 30 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
சென்னை ஐஐடி கல்லூரியில் துறைக்கு 2 இடங்கள் வீதம், ஆண்டுக்கு 30 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை அம்சங்களின் அடிப்படையில் அனைத்து ஐஐடிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை ஐஐடியில் உள்ள 15 இளங்கலைத் துறைகளில், துறைக்கு 2 இடங்கள் வீதம், ஆண்டுக்கு 30 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. 2024- 25ஆம் கல்வியாண்டில் இருந்து இந்த இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எந்தெந்த விளையாட்டுகள்?
விளையாட்டுடன் இணைந்து தொழில்நுட்பத்தையும் கற்பிக்க முயற்சிகள் எடுக்கப்படும். கிரிக்கெட், தடகளம், பேட்மின்டன், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 13 விளையாட்டுகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
அதேபோல 30 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. படித்துக்கொண்டே விளையாட்டு தொடர்பாகப் படிக்கலாம். இதற்காக 8 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். விளையாட்டுகளுக்கான மார்க்கெட் பல பில்லியன் டாலர்களாக உள்ளது.
இடங்கள் ஒதுக்கீடு எப்படி?
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சம்பந்தப்பட்ட தேர்வர், 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு 2 இடங்களை இப்போது ஒதுக்கியுள்ளோம். சர்வதேச அளவில் தங்கம் வென்ற வீரருக்கு 100 புள்ளிகள், வெள்ளிக்கு 90 புள்ளிகள், வெண்கலத்துக்கு 80 புள்ளிகள், பங்கேற்றிருந்தால் 50 புள்ளிகள் என புள்ளிகள் ஒதுக்கப்பட உள்ளன. அந்த புள்ளிகளும் மாணவர் சேர்க்கையில் கணக்கில் கொள்ளப்படும்.
ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்ட் தேர்வு மூலமும், மேற்சொன்ன புள்ளிகள், வெயிட்டேஜ் அடிப்படையிலும் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு, இடங்கள் நிரப்பப்பட உள்ளது.ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிந்ததும் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக ஐஐடி சென்னை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐஐடி சென்னை: ஓர் அறிமுகம்
ஐஐடி சென்னையைப் பற்றி எல்லோருக்கும் அறிமுகம் தேவையில்லை. நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஐஐடிகள் முக்கியமானவை. அதில் குறிப்பிடத்தக்கவற்றில் ஒன்று ஐஐடி சென்னை. முதன் முதலாக இந்த ஐஐடியில் பிஎஸ்சி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக ஐஐடி மெட்ராஸ் பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பட்டப் படிப்பை ஜூன் 2020-ல் அறிமுகப்படுத்தியது.
தலைசிறந்த கல்வி நிறுவனம்
ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework) என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் தொடர்ந்து 5-வது முறையாக இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீடு குறித்து மேலும் அறிய: https://jeeadv.iitm.ac.in/sea/