ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆக.31 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்படி?
கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 31 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஐடிஐ எனப்படும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை தேதி மேலும் நீட்டிக்கப்படுவதாக சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
இவற்றில் 2024- 2025ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு 28.06.2024 உடன் நிறைவு செய்யப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன் கருதி 8-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 01.07.2024 முதல் 15.7.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. தொடர்ந்து 16.07.2024 முதல் 31.7.2024 வரை மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐடிஐ எனப்படும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 31 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக் கட்டணம் எதுவும் இல்லை
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
மாதாமாதம் கல்வி உதவித் தொகை
* தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை.
* கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும்.
* தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (ஷூக்கள்), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.
* வெளி மாவட்ட மாணவர்களுக்கு, உணவுடன் கூடிய கட்டணமில்லா விடுதி வசதியும் உண்டு.
* 2 வருடத்துக்கு ரூ.195 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில், Refrigeration and air conditioning technician (Dual system of training) NCVT& Mechanic Motor Vehicle (Dual system of training) பிரிவுகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களின் விண்ணப்பங்கள் https://skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக ஏதேனும் ஐயம் எற்படும் நேர்வில் தொலைபேசி 044-22501350 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.