Vice Chancellor: ஆளுநரின் தன்னிச்சையான போக்கு உயர் கல்வியை பெருமளவில் பாதிக்கும்; மக்கள் கல்விக் கூட்டியக்கம் வேதனை
தமிழகத்தின் உயர்கல்விப் பரப்பில் அரசியல் நோக்கங்களுக்காக ஆளுநர் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து செயல்படுவது மாநிலத்தின் உயர்கல்வியை பெரும் அளவில் பாதிக்கும்.
தமிழகத்தின் உயர்கல்விப் பரப்பில் அரசியல் நோக்கங்களுக்காக ஆளுநர் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து செயல்படுவது மாநிலத்தின் உயர்கல்வியை பெரும் அளவில் பாதிக்கும் என்று மக்கள் கல்விக் கூட்டியக்கம் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
’’தமிழ்நாடு ஆளுநர் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர் நியமனத்திற்கான தேர்வுக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி ஒருவரையும் இணைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இத்தனை நாள் வரை இதே ஆளுநர் இதற்கு முன்னர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும்போது இந்த விதியைப் பற்றி குறிப்பிடாதது ஆச்சரியமாக உள்ளது. இந்தத் தேர்வுக் குழுவில் ஆளுநர் சார்பான பிரதிநிதி வேறு ஏற்கனவே இருக்கின்றார். கூடுதலாகப் பல்கலைக் கழக மானியக் குழுவின் பிரதிநிதியைச் சேர்ப்பதின் மூலம் இருவர் மத்திய அரசின் சார்பாக இருப்பார்கள். அதைத் தவிர ஆளுநர்தான் இறுதி முடிவு எடுப்பார்.
மத்திய அரசின் முடிவே தீர்மானிக்கப்படும்
மொத்தத்தில் மத்திய அரசின் முடிவே இங்கு தீர்மானிக்கப்படும். தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் பல்கலைக்கழங்களில் கொள்கை முடிவுகளில் தலையீடு செய்வது இயலாமல் போகும் நிலை உருவாகிவிட்டது. முன்பு மதுரை காமராசர் பல்கலைக்கழக வழக்கு ஒன்றில் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு சட்ட சபையில் வைத்து ஏற்பு தெரிவிக்காத பல்கலைக்கழக மானிய குழு விதிகள், இம்மாநிலத்தில் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்தது நினைவு கூறத்தக்கது. ஆனால் அதற்கு எதிராக மாநில உரிமையை இந்த விவகாரத்தில் முழுமையாகப் பறிக்கும் தீர்ப்புக்களும் இருக்கக்கூடும்.
அரசுக்கு எதிராக செயல்படுவதே குறிக்கோள்
2022-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆளுநர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தலையிட முடியாது. ஆனால் அந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுநர்தான். தமிழக மக்களின் கல்வி உரிமைகளை தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகள் கொண்ட சட்ட சபைதான் தீர்மானிக்க வேண்டும். கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும் என்று யு.ஜி.சி. விதி உள்ளது. இது குறித்து ஆளுநர் கவலை கூடத் தெரிவித்ததில்லை. தமிழ்நாடு அரசுக்கு முழுவதும் எதிராக செயல்படுவதையே குறிக்கோளாக ஆளுநர் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.
தமிழ்நாட்டின் ஆளுநர் மாநிலத்தின் அரசை கலந்தாலோசிக்காமலும், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே உள்ள சட்ட விதிகளையெல்லாம் மதிக்காமல் புறம் தள்ளி, தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து செயல்படுவது மக்கள் விரோத செயல்பாடாகும். தமிழகத்தின் உயர்கல்விப் பரப்பில் அரசியல் நோக்கங்களுக்காக ஆளுநர் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து செயல்படுவது மாநிலத்தின் உயர்கல்வியை பெரும் அளவில் பாதிக்கும். தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஆதரவானவர்களையே துணை வேந்தர்களாக நியமிக்கும் போக்கும் உண்டாகும். ஆளுநரின் இந்த முடிவை வன்மையாக மக்கள் கல்விக் கூட்டியக்கம் கண்டிப்பதோடு இம்முடிவை அவர் கைவிடவும் கோருகின்றது’’.
இவ்வாறு மக்கள் கல்விக் கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.