வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் அன்பில்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 33 நபர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கத்தில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 33 நேரடி நியமன "வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு" பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் கூறி உள்ளதாவது:
பள்ளிக் கல்வித் துறையின் ஓர் அங்கமாக தொடக்கக் கல்வி இயக்ககம் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் ஒன்றிய அளவிலான ஆய்வு அலுவலர்களாக செயல்படுபவர்கள்தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆவர்.
ஒன்றிய அளவில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்தல், ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல், மாணவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கொண்டு சேர்த்தல் மற்றும் மாணவர்களின் வகுப்பறைக் கற்றல் மேம்பாட்டினை தொடர்ந்து கண்காணிப்பது இவர்களின் முக்கிய பணியாகும்.
அரசாணை (நிலை எண்.82, பள்ளிக் கல்வி (தொ.க.1(1த் துறை, நாள்: 20.05.2019ன்படி காலி ஏற்படும் மொத்த வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனமாக செய்யப்படும். இக்கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்ட 33 பணியிடங்களுக்கான பணி நாடுநர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவு செய்து அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 414 ஒன்றியங்களில் 851 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் நடப்பாண்டில் காலியாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களின் 50 சதவீத காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 33 நபர்களுக்கு மதுரை மாநகரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கத்தில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் குமர குருபரன் இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னணி என்ன?
2019 - 2020 முதல் 2021 - 2022 வரையிலான ஆண்டிற்கான 33 வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு 10.09.2023 அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். நவம்பர் 9ஆம் தேதி தெரிவாளர் பட்டியல் (தேர்வு முடிவுகள்) வெளியிடப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று (ஜனவரி 28) நடைபெற்றது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 33 நேரடி நியமன "வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு" பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.