காஃபி வித் கல்வி அமைச்சர்; கன்னியாகுமரியில் தொடங்கிய அன்பில் மகேஸ்- எதற்கு?
"Coffee With கல்வி அமைச்சர்" திட்டத்தின் முதல் கலந்துரையாடல் நிகழ்வு, நாகர்கோவிலில் நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் பங்கேற்றார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காஃபி வித் கல்வி அமைச்சர் என்ற பெயரில் ஒரு பயணத்தைத் தொடங்கி உள்ளார். உயர்நிலைப் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .
பெற்றோருடன், சொந்தங்களுடன், நண்பர்களுடன் அமர்ந்து காஃபி குடித்திருப்போம். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர், மாவட்ட ஆட்சியருடன் ஒன்றாக அமர்ந்து காஃபி அருந்திய நிகழ்வை அறிந்து இருக்கிறீர்கள்தானே?
மேகநாத ரெட்டி ஐஏஎஸ் தொடங்கிவைத்த திட்டம்
முதல் முறையாக 2022ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் காஃபி வித் கலெக்டர் என்ற பெயரில் புதுமையான முறையில், மாவட்ட ஆட்சியர் - மாணவர்கள் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போதைய ஆட்சியராக இருந்த மேகநாத ரெட்டி இந்த சந்திப்பை அறிமுகம் செய்தார். தொடர்ந்து தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஜெயசீலனும் அதே சந்திப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ’காஃபி வித் கல்வி அமைச்சர்’ என்ற பெயரில் ஒரு பயணத்தைத் தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
"Coffee With கல்வி அமைச்சர்" எனும் பெரும் பயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கியுள்ளோம். "Coffee With கல்வி அமைச்சர்" திட்டத்தின் முதல் கலந்துரையாடல் நிகழ்வு, நாகர்கோவில் செயிண்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் பங்கேற்றார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் மேல்நிலை 2ஆம் ஆண்டு பயிலும் 1200 மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டார்கள்.
"Coffee With கல்வி அமைச்சர்" எனும் பெரும் பயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கியுள்ளோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) August 29, 2024
"Coffee With கல்வி அமைச்சர்" திட்டத்தின் முதல் கலந்துரையாடல் நிகழ்வு நாகர்கோவில் செயிண்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாண்புமிகு அமைச்சர் @Manothangaraj அவர்களின் பங்கேற்போடு… pic.twitter.com/aO3TYkrko3
சந்திப்பில் நிகழ்ந்தது என்ன?
சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், பெண் குழந்தைகளின் சுதந்திரம், 234/77 திட்டத்தின் நேரடி ஆய்வுகள் போன்ற தலைப்புகளில் மாணவச் செல்வங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, 'பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும்' என்பதையும் வலியுறுத்தினேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிவிட்டுள்ளார்.