CM letter to PM: குடிமைப்பணி தேர்வு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.. கோரிக்கைகள் என்ன?
குடிமைப் பணி தேர்வு குறித்துப் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குடிமைப் பணி தேர்வு குறித்துப் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குடிமைப் பணி தேர்வுகளை எழுத முடியாமல் போனவர்களுக்காக வயது வரம்பைத் தளர்த்தக் கோரிக்கை இந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பினைத் தளர்த்திடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், குடிமைப் பணித் தேர்வுகள் உட்பட மத்திய அரசால் நடத்தப்பட்ட பல்வேறு ஆள்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வயது வரம்பை கோவிட் பெருந்தொற்றுக் காலங்களில் தவறவிட்ட தேர்வர்கள், ஒருமுறை நடவடிக்கையாக தங்களின் வயது வரம்பை நீட்டிக்க வேண்டுமென்று கோரி வருவதைக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்கக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, அனைத்து தேர்வர்களுக்கும் வயது தளர்வுடன் கூடுதல் முயற்சிக்கான வாய்ப்புகளை வழங்கிட நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
#JUSTIN | குடிமைப்பணி தேர்வு எழுத இயலாமல் போனவர்களுக்கு வயது வரம்பு தளர்வு தேவை - முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்https://t.co/wupaoCzH82 | #MKStalin #TNGovt #narendermodi pic.twitter.com/1EfFdqs057
— ABP Nadu (@abpnadu) February 7, 2023
மேலும், உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இது போன்ற அறிவுரைகள் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் வயது வரம்பு தளர்வு
தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்றின் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவோருக்கான வயது வரம்பை 2 ஆண்டுகள் தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டதைச் சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், மத்திய அரசும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சேமக் காவல் படைத் தேர்வுகளில், அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு முறை நடவடிக்கையாக, 3 ஆண்டுகள் வயது வரம்பைத் தளர்த்தி ஆணையிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தேர்வர்களுக்கு இத்தகைய ஒருமுறை தளர்வு வழங்குவதன் வாயிலாக, அரசுக்கு எவ்வித நிதிச் சுமை ஏற்படாது என்றும், இது குடிமைப் பணிச் சேவையில் சேர விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கிடும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கோவிட் பெருந்தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, குடிமைப் பணித் தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பினை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.