Teachers Appointment: 2024-ல் வெறும் 1966 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: கல்வித்தரம் பற்றிக் கல்வியாளர்கள் வேதனை!
மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதால் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மேலும் மேலும் சீரழியுமே தவிர, உயராது.
அரசுப் பள்ளிகளில் 2024ஆம்ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை மட்டும் நியமிக்க டிஆர்பி திட்டமிட்டுள்ள நிலையில், கல்வித்தரம் பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு, உதவிப் பேராசிரியர் பணி உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்குத் தேர்வு எப்போது என்னும் உத்தேச அட்டவணையை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
எப்போது எந்தெந்தத் தேர்வு?
1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை இந்த மாதமே வெளியாகும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 200 பணியிடங்களைக் கொண்ட இதற்கான தேர்வு குறித்த அறிவிக்கை மே மாதம் வெளியாக உள்ளது. இவை இரண்டு மட்டுமே பள்ளிக் கல்வி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாக உள்ளன.
கடந்த 2023ஆம்ஆண்டு டிஆர்பி வெளியிட்ட தேர்வுக்கால அட்டவணையில் 9 தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றன. எனினும் அவற்றின் 2 தேர்வை மட்டுமே டிஆர்பி நடத்தியது. அதேபோல கடந்தாண்டு வெளியான தேர்வு அட்டவணையில் இடைநிலை ஆசிரியர் பணியில் 6,553 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால், 2024ஆம் ஆண்டுக்கான அட்டவணையில் அந்த எண்ணிக்கை 1,766 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்வித்தரம் பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும்போது, ’’அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒவ்வொரு மாதமும் பெருமளவிலான ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். அதனால், ஒவ்வொரு ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டில் 6553 ஆக இருந்த காலியிடங்களின் எண்ணிக்கை 8643 ஆக அதிகரித்திருப்பதாக தமிழக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த இடங்களை முழுமையாக நிரப்பாமல் 1766 இடங்களை மட்டும் நிரப்புவது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் இருந்து நடப்பாண்டில் பல்லாயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், 1966 ஆசிரியர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஒரே சீராக இல்லை. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில் வடமாவட்டங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களில் இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும். இத்தகைய சூழலில் காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டால் மட்டும் தான் வடமாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கல்வித்தரம் மேலும் மேலும் சீரழியும்
அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அவற்றை புறக்கணித்து விட்டு, மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதால் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மேலும் மேலும் சீரழியுமே தவிர, உயராது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க நிதிப்பற்றாக்குறை ஒரு தடையாக இருக்கக் கூடாது.
கல்வித் துறைக்கும், மருத்துவத் துறைக்கும்தான் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு பெருமளவில் அதிகரிக்க வேண்டும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.