Engineering Degree in Tamil : பி.இ படிப்புகளை இனி தமிழில் தொடரலாம்: ஏஐசிடிஇ அனுமதி
இதன் மூலம், கிராமப்புறங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் வாழும் மாணவர்கள் தயக்கமின்றி தொழில்முறை படிப்புகளை தங்களது தாய்மொழிகளிலேயே கற்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்
தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளை வழங்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஜூன் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கும் வரும் என்றும் தெரிவித்துள்ளது.
தேசிய அங்கீகார வாரியத்தால் (என்.பி.ஏ) சான்றளிக்கப்பட்ட, அந்தந்த மாநிலங்களில் முதலிடத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள் மட்டுமே தற்போது உள்ளூர் மொழிகளில் பொறியியல் கல்வியை வழங்க வேண்டும் என்றும், தன்னாட்சி கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்தது. ஒரு batch-ல் குறைந்தது 30 முதல் 60 எண்ணிக்கையிலான மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கிராமப்புறங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் வாழும் மாணவர்கள் தயக்கமின்றி தொழில்முறை படிப்புகளை தங்களது தாய்மொழிகளிலேயே கற்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஐரோப்பியா, சீனா, ஜப்பான், ரஷியா போன்ற நாடுகளிலும் தொழில்முறை படிப்புகள் மாணவர்களின் தாய் மொழிகளில் கற்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவது குறித்து உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர், உயர் கல்வி செயலாளர், ஐஐடி இயக்குநர்கள், கல்வியாளர்கள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து, தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான பணிக்குழுவை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அமைத்தார். உயர் கல்வி செயலாளரின் தலைமையில் இந்தப் பணிக்குழு, அமைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளிலிருந்து சுமார் 1.5 மில்லியன் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். ஆனால், அதில் வெறும் ஏழு சதவீதத்தினர் மட்டுமே பொறியியல் சம்பந்தமான வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பதற்கும், பிராந்திய மொழிகளில் தொழில்முறை கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
முன்னதாக, 2021 பிப்ரவரி மாத தொடக்கத்தில் அஸ்ஸாமின் சோனித்பூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய அவர், " ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலாவது அவர்களது தாய்மொழியில் பாடம் பயிற்றுவிப்பதைத் தொடங்க வேண்டும். நாடு தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள வேளையில், அஸ்ஸாமில், உள்ளூர் மொழியில் பயிற்றுவிக்கக் கூடிய ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை நாம் தொடங்குவோம், பின்னர் அது படிப்படியாக அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.
கடந்தாண்டு வெளியான புதிய கல்விக் கொள்கையில், "5-ஆம் வகுப்பு வரையிலும், முன்னுரிமை அடிப்படையில் 8-ஆம் வகுப்பு வரையிலும் பயிற்று மொழி, தாய் மொழியாக இருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.