Crime: 3000 கி.மீ கடந்து ஆன்லைன் காதலரை பார்க்கச்சென்ற பெண்.. கடற்கரையில் கிடைத்த உடல் துண்டுகள்.. நடந்தது என்ன?
51 வயது பெண்ணான பிளாங்கா அரேலானோ, முன்னதாக தனது 37 வயது ஆன்லைன் காதலரை நேரில் சந்திப்பதற்காக கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர்கள் கடந்து பெரு நாட்டுக்கு பயணித்துள்ளார்.
கிட்டத்தட்ட 5 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை பயணித்து ஆன்லைன் காதலனை காணச் சென்ற பெண் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவைச் சேர்ந்த 51 வயது பெண்ணான பிளாங்கா அரேலானோ, முன்னதாக தனது ஆன்லைன் காதலரை நேரில் சந்திப்பதற்காக கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர்கள் கடந்து பெரு நாட்டுக்கு பயணித்துள்ளார். இந்நிலையில், உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு, சிதைந்த நிலையில், அவரது உடல் கடந்த நவம்பர் 9ஆம் தேதி பெருவின் ஹூவாச்சோ கடற்கரையில் மீட்கப்பட்டது.
பெருவைச் சேர்ந்த 37 வயதான ஜுவான் பாப்லோ ஜீசஸ் எனும் நபரை நேரில் சந்திக்காமலேயே பல மாதங்களாக மெக்சிகோவைச் சேர்ந்த பிளாங்கா அரேலானோ காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூலை மாதம் தனது காதலனை இறுதியாக நேரில் சந்திக்கச் செல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் முன்னதாக நவம்பர் 7ஆம் தேதி தனது அத்தை பிளாங்காவிடம் பேசியதாகவும், அவர் தங்களது காதல் உறவு சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்ததாக பிளாங்காவின் தங்கை மகள் அவரது தங்கை மகள் அரேலானோ தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு கடந்த இரண்டு வாரங்களாக பிளாங்காவை உறவினர் எவரும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், தற்போது கொடூரமான முறையில் கொல்லப்பட்ட அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளாங்கா உடல் உறுப்புகளுக்காக கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும், அவரது காதலரைத் தேடியும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் இந்தியாவில் லிவ் இன் உறவில் இருந்த ஷ்ரத்தா எனும் பெண்ணை அவரது காதலர் அஃப்தாப் 35 துண்டுகளாக வெட்டிக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்ட நிலையில், அதன் பிறகு ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார்.
வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், மெஹ்ராலி காட்டில் இருந்து ஷ்ரத்தாவின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை டெல்லி காவல் துறையினர் முன்னதாக மீட்டுள்ளனர். மண்டை ஓட்டின் அடிப்பகுதி, துண்டிக்கப்பட்ட தாடை பகுதி மற்றும் பல எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருத்தி பார்க்க தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.
ஷ்ரத்தா தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் மறைத்ததாக அப்தாப் ஒப்புக்கொண்டுள்ளார். கொலை செய்த பிறகு வீட்டில் இருந்த ஷர்த்தாவின் புகைப்படங்களை அவர் அழித்துள்ளார்.