காதலிக்க மறுத்த மாணவி; பள்ளிக்கு கத்தியுடன் சென்ற வாலிபரால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஒருதலை காதலால் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் அரசு பள்ளிக்கு கொடுவா கத்தியுடன் சென்ற வாலிபரின் செயலால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே ஒருதலை காதலால் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின், பள்ளிக்கு கொடுவா கத்தியுடன் சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. கண்டாச்சிபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் ஆகாஷ் (20), என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவியிடம் அடிக்கடி காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் ஆகாஷ் வலது கையில் மாணவியின் பெயரை பச்சை குத்திகொண்டு மாணவியின் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து வந்ததாகவும், இதனை மாணவியின் பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாணவி படிக்கும் அரசு மேல்நிலை பள்ளிக்கு ஆகாஷ் நண்பனின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனைபார்த்த மாணவி அப்பள்ளி தலைமை ஆசிரியர் உதவியுடன் மாணவியின் தாய் மற்றும் உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பள்ளிக்கு சென்ற உறவினர்கள், பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த ஆகாஷிடம் கேட்டபோது அவரது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கொடுவா கத்தி எடுத்து மாணவியின் உறவினர்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து கத்தியை வீசி ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளான்.
தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாஷை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலிசார் வழக்கு பதிந்து வாலிபர் ஆகாஷை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

