Crime: விழுப்புரத்தில் பரபரப்பு... தலைமையாசிரியர் தம்பதி வீட்டில் சடலமாக மீட்பு
2 பேரை கொலை செய்து தூக்கில் தொங்க விட ஒருவரால் மட்டும் முடியாது. எனவே, 3 அல்லது 4 நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம்.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வளவனூரில் வீட்டில் தனியாக வசித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களான கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே வளவனூர் கே.எம்.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 68), இவரது மனைவி உமாதேவி (61). இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் மகன், மகள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ராஜன், உமாதேவி தம்பதியினர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இவர்களை தேடி அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது ராஜன், உமாதேவி ஆகியோர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வளவனூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மர்மமான முறையில் இறந்து கிடந்தவர்களின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதில் இவர்களுக்கு சொந்தமான நகைகள், பணம் அனைத்தும் வங்கி லாக்கரிலும், கணக்கிலும் உள்ளது எனத் தெரியவந்தது.
மேலும், குடும்ப செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அதேநேரத்தில் இவர்களது வீட்டில் வாடகைக்கு இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த நபர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியிடமிருந்து ரூ.21 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் தம்பதியினர் தாங்களாகவே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என மருத்துவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியாக கூற முடியுமென மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த ராஜன், உமாதேவி தம்பதியினரை பணத்திற்காக யாரேனும் கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட பகையால் கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற மற்றொரு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேரை கொலை செய்து தூக்கில் தொங்க விட ஒருவரால் மட்டும் முடியாது. எனவே, 3 அல்லது 4 நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கணித்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், செல்போன் சிக்னல்கள் போன்றவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு மர்மமான முறையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.