Crime: வீடு புகுந்து பெண்ணை வன்கொடுமை செய்து அட்டூழியம்.. தாங்கிக்கொள்ள முடியாமல் கணவன், மனைவி தற்கொலை!
வெள்ளிக்கிழமை காலை, உயிரிழந்த தம்பதியினரின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தயாராகும் போது, தாங்கள் இருவரும் விஷம் குடித்து இறந்துவிடப் போவதாக கூறியதாக தம்பதியரின் குழந்தைகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2 பேர் வீடு புகுந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் கூட்டாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு தற்கொலைக்கு முன் தம்பதியினர் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, காவல்துறையினர் வீடியோவின் பதிவை அடிப்படையாக கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பாஸ்தி காவல் கண்காணிப்பாளர் (SP) கோபால் கிருஷ்ணா தெரிவிக்கையில், ”தற்கொலைக்கு முயன்ற கணவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இறந்துவிட்டார். பாதிக்கப்பட்ட அவரது மனைவி மறுநாள் கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சையின்போது இறந்துவிட்டார்” என தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு ருதௌலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதிக்கப்பட்ட தம்பதியினர் வீட்டிற்குள் புகுந்த இரண்டு பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தம்பதியரின் உறவினர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக உயிரிழந்த நபரின் சகோதரரால் ஒரு புகார் தனிப்பட்ட முறையில் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஆண்கள் மீது 376 டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) மற்றும் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆதர்ஷ் (25), திரிலோகி (45) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இதுகுறித்து காவல்துறை தரப்பில், வெள்ளிக்கிழமை காலை, உயிரிழந்த தம்பதியினரின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தயாராகும் போது, தாங்கள் இருவரும் விஷம் குடித்து இறந்துவிடப் போவதாக தம்பதியரின் குழந்தைகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த தம்பதியருக்கு எட்டு மற்றும் ஆறு வயதில் இரண்டு மகன்கள், ஒரு வயதில் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், பாலியல் வன்கொடுமைக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சொந்தமான நிலத்தை விற்றதற்கு கருத்து வேறுபாடு இருந்ததாகவும், முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கொடூர சம்பவம்:
மற்றொரு சம்பவத்தில், ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் 3 ஆம் வகுப்பு சிறுமி, அவள் படிக்கும் பள்ளியின் பியூனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் ஒன்றை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ எட்டு வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ராயகடா நகருக்கு அருகிலுள்ள ஒரு ஆசிரமப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனால் கோபமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து தற்போது விசாரணை வலையத்திற்குள் வைத்திருக்கிறோம்” என கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.