நாயை மூங்கிலால் அடித்துக்கொன்று, கழுத்தில் கயிறு கட்டி ஊர்வலம்.. இருவர் மீது வழக்குப்பதிவு
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழன் மாலை ஷாஹ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே விலங்குகள் உரிமைக் குழு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அகமதாபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியில் உள்ள ஷாஹ்பூர் பகுதியில் ஒரு கும்பல் நாயை அடித்துக் கொன்றதாகவும், பின்னர் அதன் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதாகவும் கூறப்படும் வீடியோ வெளியானதை அடுத்து, ஆமதாபாத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழன் மாலை ஷாஹ்பூர் காவல் நிலையத்திற்கு வெளியே விலங்குகள் உரிமைக் குழு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. காவல்துறையின் கூற்றுப்படி, ஷாபூரில் உள்ள புகரனி போலில் வசிப்பவர்கள் பயல் ததானியா மற்றும் அஜய் ததானியா என்னும் இருவர் நாய் ஒன்றை கொன்று அதனை கயிற்றில் கட்டி இழுத்து சென்று இறுதி ஊர்வலம் நடத்தி இருக்கின்றனர்.
அதுவும் ஊருக்குள் நடத்தியதால் அதனை காண்பவர்கள் விளையாட்டாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் எப்படியோ விலங்குகள் ஆணையத்திற்கு தெரிய வந்த இந்த செய்தியை தொடர்ந்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலிசார் விசாரணை நடத்தி முக்கியமான இருவரான பாயல் ததானியா மற்றும் அஜய் ததானியா ஆகியோரை கைது செய்து 429 பிரிவின் கீழ் விலங்குகளைக் கொன்றதற்காகவும், 34 இன் கீழ் பொது நோக்கத்துடன் செய்த குற்றத்திற்காகவும், விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 114 பிரிவுகளின் கீழும் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, நவம்பர் 14 அன்று இரவு, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் தலைமையிலான ஒரு குழு தெரு நாயை மூங்கில் கம்புகளால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது, பின்னர் இறந்த நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்று வீடுகள் உள்ள பகுதியில் ஊர்வலம் நடத்தியது.
அகமதாபாத் நகரத்தில் உள்ள விலங்கு உரிமைக் குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைத் தூண்டும் இதன் வீடியோ புதன்கிழமை வெளிவந்தது. வெறி பிடித்த நாயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றவாளி கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். “வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்... நாய்க்கு வெறி பிடித்திருப்பதாக அவர்களுக்கு சந்தேகம் எழும்பி இருந்தால், விலங்குகள் நலத் துறையைத் தொடர்புகொண்டிருக்கலாம். அல்லது கார்ப்ரேஷனில் கூறியிருக்கலாம். மாறாக அவர்களே கொள்வது தவறு, சட்டப்படி குற்றமும் ஆகும். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது, விசாரணையின் முடிவில் மேலும் எத்தனை பேர் மீது வழக்கு பதியப்படும் என்பது குறித்து தகவல்கள் வரும்” என்று ஷாஹ்பூர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.