Crime: பைக்கில் சென்ற நகை கடைக்காரர் மகன்களை கடத்தி ரூ.70 லட்சம் பறிப்பு - சிக்கிய சித்தப்பா
திருவண்ணாமலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகைக்கடை க்காரர் மகன்களை கடத்தி ரூ.70 லட்ச ரூபாய் பறித்த சித்தப்பா உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அய்யகுளம் தெருவை சேர்ந்த நரேந்திர குமார் இவர் திருவண்ணாமலை கள்ளக்கடை சந்திப்பில் நகை கடை வைத்துள்ளார். இவரது மகன்களான ஜித்தேஷ் வயது (29), அரியந் வயது (27) ஆகிய இருவரும் அவருடைய தந்தையின் கடையை பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் வழக்கம் போல் கடையில் வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டனர். இரவு 10 மணிக்கு இவர்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்ற போது காரில் வந்த ஒரு மர்ம கும்பல் திடீரென இரு சக்கர வாகனத்தை வழிமறித்து இருவரையும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தி சென்றுள்ளர். இந்த செயலை அங்கிருந்தவர்கள் கண்டதும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நரேந்திர குமாரை கடத்தல் கும்பல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மகன் விடுவிக்க வேண்டுமெனில் 70 லட்சம் ரூபாய் தர வேண்டும். பணத்தை எங்கு வைத்து கொடுக்க வேண்டும் என பின்னர் கூறுகிறோம் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.
நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்டு என்னிடம் இவ்வளவு தொகை இல்லை என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே பேரம் நடந்து ஒரு வழியாக 10 லட்சம் ரூபாய் தர முடிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த பணத்தை திருக்கோவிலூர் சாலையில் அருகே வந்து தருமாறு கூறியுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு எந்தவித தகவலும் தெரிவிக்க கூடாது என்றும், கடத்தல் கும்பல் மிரட்டி உள்ளது. இருப்பினும் நரேந்திர குமார் இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னால் கடத்தல் கும்பல் கூறியது; உடனடியாக பத்து லட்சம் ரூபாய் உடன் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று பணத்தை கொடுத்தார் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் ஜித்தேஷ் அரியந்து ஆகிய இரண்டு பேரை காரில் இருந்து இறக்கிவிட்டு பணத்துடன் தப்பினர். இந்த நிலையில் அந்த நபர்களை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் செங்கம் அருகே மடக்கினர்.
கடத்துவதற்கு மூளையாக இருந்த சித்தப்பா உட்பட 4 பேர் கைது
அதனை தொடர்ந்து காரில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த விக்ரம், மனு, வாசிம் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் பிடித்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் நரேந்திர குமாரின் தம்பியும் கடத்தப்பட்ட இரண்டு பேரின் சித்தப்பாவுமான திருவண்ணாமலை சேர்ந்த அன்ஸராஜ் என்பவர் இதில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அன்ஸ்ராஜ் விக்ரம், மனு, வாசிம் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகு பணத்துக்காக கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.