Crime : ”எதுக்கு இப்படி கத்தி கலாட்டா பண்றீங்க” : தனியார் கல்லூரி செக்யூரிட்டி கொடூர கொலை..
தனியார் கல்லூரியின் பாதுகாவலரை, இளைஞர் கும்பல் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பாதுகாவலராக வேலைபார்த்து வந்த 54 வயது நபரை இளைஞர்கள் கும்பல் தாக்கி கொலை செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது.
இந்த தனியார் கல்லூரியில் சுப்ரமணி(54) என்ற நபர் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இந்தச் சூழலில் கடந்த திங்கட்கிழமை இரவு இவர் வழக்கம் போல் கல்லூரியில் பாதுகாவலர் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கல்லூரிக்கு வெளியே ஒரு சில இளைஞர்கள் கூட்டமாக சத்தமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி உள்ளே இருந்த கல்லூரி முதல்வர் பாதுகாவலர் சுப்ரமணியை பார்க்க அனுப்பியுள்ளார்.
அப்போது சுப்ரமணி அங்குச் சென்று அந்த இளைஞர்களுடன் பேசியுள்ளார். அந்தச் சமயம் அவர்களுக்கும் சுப்ரமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் சுப்ரமணியை கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மயக்கம் அடைந்த உடன் இவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வந்த நபர்கள் சிலர் ரத்து காயங்களுடன் சுப்ரமணி சாலையில் கிடந்ததை பார்த்துள்ளனர். அவர்கள் சுப்ரமணியை மீட்டு அருகே உள்ள ஒரு சிறிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இருந்த மருத்துவர்கள் சுப்ரமணியை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். சுப்ரமணியை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சுப்ரமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பாதுகாவலர் சுப்ரமணியை தாக்கியது நவீன் என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நவீனை கைது செய்துள்ளனர். மேலும் சுப்ரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் சிலர் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆகவே இந்த வழக்கில் முன்விரோதம் எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்