Crime : "காலையில எழுந்திருக்கல, சாணி தெளிக்கலன்னு சொன்னது பிடிக்கல.." :மாமியாரை கொன்ற பெண் கைது..
அம்சாவின் செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அதில் உள்ள எண்களை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி ஒரே நபரிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.
திருப்பத்தூர் அருகே அதிகாலையில் எழுந்து வேலை பார்க்க ஆத்திரத்தில் மாமியாரை மருமகள் ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் ரயில் நிலையம் அருகேயுள்ள புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி காவலாளியான செல்வராஜ் என்பவர் மனைவி ராணி, மகன் ஏழுமலை, மருமகள் அம்சா ஆகியோரோடு வசித்து வந்தார். ஏழுமலை - அம்சா தம்பதியினருக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கடந்த ஜூன் 29-ஆம் தேதி வீட்டின் முற்றத்தில் ராணியும், அறையில் அம்சாவும் தூங்கியுள்ளனர்.
அதிகாலையில் எழுந்து பார்த்தபோது ராணி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அம்சா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த நிலையில் இதுகுறித்து கந்திலி காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மருமகள் அம்சாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேச சந்தேகம் வலுத்தது.
உடனடியாக அம்சாவின் செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அதில் உள்ள எண்களை ஆய்வு செய்த போது அவர் அடிக்கடி ஒரே நபரிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மாமியாரை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை அம்சா ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் குனிச்சி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த தான் 12-ஆம் வகுப்பு படித்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார்.
இதனிடையே அம்சாவுக்கு ஏழுமலையோடு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் அவர் சென்னை சென்று விட்டதால் அம்சா மாமியாருடன் வசித்து வந்துள்ளார். அப்போது அடிக்கடி கார்த்திகேயனுடன் அவர் பேசி வந்ததை மாமியார் ராணி கண்டித்துள்ளார். மேலும் தினமும் காலையில் தாமதாக எழுந்துள்ளதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் வீட்டு வாசலில் அதிகாலையில் எழுந்து சாணி தெளித்து கோலம் போடமாட்டாயா? என திட்டியுள்ளார். இதை அம்சா கார்த்திகேயனிடம் கூறியுள்ளார். மேலும் மாமியார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், சுதந்திரமாக போனில் பேச அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் ராணி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளதோடு அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாததால் கார்த்திகேயனுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அவருடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரும் வந்துள்ளார். 3 பேரும் ராணியை கட்டையால் அடித்து கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர். இதனையடுத்து அம்சா, கார்த்திகேயன், 12 ஆம் வகுப்பு மாணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் 12 ஆம் வகுப்பு மாணவர் தற்போது நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்