திண்டிவனம்: கல்குவாரியில் குளிக்கச்சென்ற பேரன், பேத்தி, பாட்டி உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு
விழுப்புரம் : திண்டிவனம் அருகே கல்குவாரியில் குளிக்கச்சென்ற மூதாட்டி உட்பட பேரன், பேத்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரியில் குளிக்கச்சென்ற மூதாட்டி உட்பட பேரன், பேத்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்த பூங்காவனம் மனைவி புஷ்பா(60). இவர் தனது மகள் விஜயஸ்ரீ, மருமகன் சாமிநாதன்(லாரி ஓட்டுனர்) இவர்கள் குடும்பத்துடன் திண்டிவனம் அருகே உள்ள தென்களவாய் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனது குழந்தைக்கு பள்ளி விடுமுறை என்பதால் விஜயஸ்ரீ அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். சாமிநாதனின் குழந்தைகள் 3 பேரும் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் படித்து வருகின்றனர். வினோதினி(13), ஏழாம் வகுப்பு. ஷாலினி ஐந்தாம் வகுப்பும், (10), கிருஷ்ணன்(8) மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு சென்ற குழந்தைகள், பாட்டி புஷ்பாவுடன் அப்பகுதியில் உள்ள செயல்படாத கல் குவாரியில் துணி துவைத்து விட்டு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது பேரக்குழந்தைகள் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்த படி உயிருக்கு போராடி உள்ளனர். இவரை காப்பாற்ற வேண்டுமென மூதாட்டியும் முற்பட்ட போது மூதாட்டி புஷ்பாவும் நீரில் மூழ்கி உள்ளார்.
கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் இறங்கி மூதாட்டி மற்றும் குழந்தைகளை தேடினர். பின்னர் புஷ்பா மற்றும் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர். உடலைக் கைப்பற்றிய பிரம்மதேசம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி பேரன், பேத்திகள் என 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் பெருமுக்கல் பகுதியில் கல் குவாரிகள் இயங்கி வருகிறது. குறிப்பாக செயல்படாத கல்குவாரிகள் அடைக்கப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. மழையின் காரணமாக கல்குவாரி பள்ளத்தில் மழை நீர் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் துணிகள் துவைப்பதற்கும், குளிப்பதற்கும் செல்கின்றனர்.
இந்நிலையில் கல்குவாரியின் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் இப்பகுதியில் தனி கவனம் செலுத்தி கல் குவாரிகளுக்கு கட்டுபாடுகளை விதித்தும், செயல்படாத கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.