மயிலாடுதுறையில் வாலிபர் கொலை: ரவுடி உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மயிலாடுதுறை இளைஞர் கொலை வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மயிலாடுதுறையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த பரபரப்பான கொலை வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளி (History Sheeter) உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி
மயிலாடுதுறை காவல் சரகத்திற்குட்பட்ட கூறைநாடு, திருவள்ளுவர்புரம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் 26 வயதான ராஜேந்திரன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தெட்சணாமூர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த 07.05.2020 அன்று வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக, ராஜேந்திரன் தனது தெருவில் உள்ள பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளால் பேசி சத்தம் போட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அதே தெருவில் வசித்து வந்த எட்டப்பராஜன் மகன் 36 வயதான மாரிசெல்வம் என்பவர் கண்டித்துள்ளார்.
கத்தியால் குத்தி கொலை
மாரிசெல்வம் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தனது நண்பர்களான கூறைநாடு கிட்டப்பா தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் 24 வயதான சேது மற்றும் ராஜேந்திரன் மகன் 21 வயதான சூர்யா ஆகியோருடன் சேர்ந்து மாரிசெல்வத்தை கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாரிசெல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மாரிசெல்வத்தின் மனைவி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேந்திரன், சேது மற்றும் சூர்யா ஆகிய மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணை மற்றும் கைது
அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு இவ்வழக்கின் புலன் விசாரணையை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த எதிரிகள் மூவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினார். தொடர்ந்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மூன்றாவது எதிரியான சூர்யா என்பவர், தொடர்ந்து பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 'போக்கிரி சரித்திர பதிவேடு' (Rowdy History Sheet) துவங்கப்பட்டு, காவல்துறையினரால் தீவிரமாகத் கண்காணிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத் தீர்ப்பு
இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அரசுத் தரப்பு மற்றும் எதிரித் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று (03.01.2026) தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட
* ராஜேந்திரன் (26)
* சேது (24)
* சூர்யா (21)
ஆகிய மூவரும் குற்றவாளிகள் என உறுதி செய்த நீதிபதி, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூவரும் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல்துறையினருக்கு பாராட்டு
இவ்வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் இராம.சேயோனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த முன்னாள் ஆய்வாளர் சிங்காரவேலு, தற்போதைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நீதிமன்றப் பணிகளைச் சிறப்பாகக் கவனித்த காவலர் மாரிமுத்து ஆகியோரை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.






















