Thiruvennallur Truck driver: காதலித்து திருமணம் செய்த லாரி டிரைவர்; வெட்டி ஆற்றில் வீசிய உறவினர்கள்!
திருவெண்ணெய்நல்லூர் அருகே காதல் திருமணம் செய்த லாரி டிரைவரை சரமாரியாக வெட்டி ஆற்றில் வீசிச்சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஆறுமுகம் (22). இவர் சென்னை கிஷ்கிந்தா பகுதியிலுள்ள ஏழுமலை என்பவரிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தபோது, அவரது மகள் நந்தினியுடன் (19) பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனைவாரி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அதே ஊரில் உள்ள ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர் . இதையறிந்த நந்தினியின் உறவினர்கள் கடந்த மாதம் 11ம் தேதி ஆனைவாரி கிராமத்திற்கு வந்து நந்தினியை அழைத்துச் சென்றுவிட்டனர்.
ஆனால் நந்தினி, கணவர் ஆறுமுகத்துடன் தான் வாழப் போவதாக அடம் பிடித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவரை கடந்த மாதம் 27ம் தேதி அழைத்து வந்து ஆனைவாரி கிராமத்தில் விட்டு சென்றுள்ளனர். பின்னர் 30ம் தேதி வரை 3 நாட்கள் உறவினர் வீட்டில் இருந்த தம்பதிகள் கடந்த 1ம் தேதி கரடிப்பாக்கம் கிராமத்திற்கு சென்றனர். இந்நிலையில், நந்தினியின் சித்தப்பா அயன் (எ) பழனி (34) உள்ளிட்ட 4 பேர் காரில் வந்து ஆறு முகத்தை சர மாரியாக தாக்கி கத்தி யால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை காரில் தூக்கி சென்று கடலூர் மாவட் டம் கரும்பூர் கிராமத்தின் அருகே ஆற்றங்கரையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து நந்தினி, திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ஆறுமுகத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து சென்னை கிஷ்கிந்தா பகுதியை சேர்ந்த ராஜி மகன் அயன் என்கிற பழனி (36), சீனுவாசன் மகன் சசிகுமார் (22), நடேசன் மகன் தினேஷ்குமார் (29), ராஜி மகன் பார்த்திபன் (26) ஆகிய 4 பேரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இவர்கள் 4 பேரும் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவெண்ணெய் நல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் கைது செய்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி செஞ்சி கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் இக்கொலை முயற்சி குறித்து பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர், காதல் திருமணம் செய்த லாரி டிரைவரை சரமாரியாக வெட்டி ஆற்றில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.