Crime: பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு; போலீசை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளி..! நடந்தது என்ன?
திருவாரூரில் பிரபல ரவுடி ராஜ்குமார் சரமாரியாக 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் பிரபல ரவுடி. வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் திருவாரூர் அருகே உள்ள கமலாபுரம் என்கிற இடத்தில் 8 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கொலை நடந்த 12 மணி நேரத்தில் காவல் துறையினர் 5 முக்கிய கொலை குற்றவாளிகளை கைது செய்தனர். தொடர்ந்து ராஜ்குமாரின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பிறகு உடலை அமரர் ஊர்தியில் வைத்து இருநூற்றுக்கும் மேற்பட்ட வளரும் கட்சியினர் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் கொலை நடந்த 12 மணி நேரத்தில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான நடேச தமிழார்வன் மகன் ஸ்டாலின் பாரதி, நடேச தமிழார்வனின் அண்ணன் மகன் வீரபாண்டி, சூர்யா,மாதவன், அரசு ஆகிய 5பேரை தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த ரவி மகன் பிரவீன் வயது 22 என்பவன் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம் மனோரா அருகில் பதுங்கி இருப்பதாக காவலாய் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் மனோராவிற்கு விரைந்தனர்.
இதனையடுத்து பிரவீனை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றமுயன்ற போது தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டி உள்ளான். அதனை இளங்கோ தனது வலது கையால் தடுத்து விட்டு ஓடும்போது விரட்டிச் சென்று மீண்டும் அவரை தாக்க முயற்சித்துள்ளான்.அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தனது கை துப்பாக்கியால் பிரவினின் இடது கால் முட்டிக்கு கீழ் சுட்டு அவனைப் பிடித்துள்ளனர்.
இதில் காயம்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் குற்றவாளி பிரவின் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.பிரவின்மீது ஏற்கனவே திருவாருர் நகர காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த வழக்கு மற்றும் வழிப்பறி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.