Petrol Bomb Attack: எடப்பாடி காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் அதிரடி கைது.
சமூக வலைத்தளங்களை பார்த்து தானும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதை பற்ற வைத்து காவல் நிலையத்தின் மீது வீசியதாக பரபரப்பு வாக்குமூலம்.
![Petrol Bomb Attack: எடப்பாடி காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் அதிரடி கைது. The person who threw petrol bomb at Edappadi police station was arrested. Petrol Bomb Attack: எடப்பாடி காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் அதிரடி கைது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/06/1ec0951807e119747ca660f6c90e39901722953839177113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே எடப்பாடி ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி துவக்கப்பள்ளி, இ -சேவை மையம், நூல் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படும் இப்பகுதியில் உள்ள எடப்பாடி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென அடுத்தடுத்து இரண்டு மர்ம பொருள்கள் காவல் நிலைய வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உஷாராகி அங்கு சென்று பார்த்தபோது. அப்பொருள் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பற்றி எறிந்த தீயினை அணைத்த காவலர்கள், காவல் நிலையத்திற்கு வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர்கள் சிலர் காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
காவல் நிலைய வளாகத்தில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், ஒரு பாட்டில் மட்டும் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
அண்மையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சிலர் மீது எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் இதுபோன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற கோணத்திலும் எடப்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடினர். அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் எடப்பாடி காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.
காவல் நிலையத்தில் குண்டு வீச எப்படி தைரியம் வந்தது?
ரவுடிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் என அனைவரும் காவல் நிலைய பக்கம் செல்லவே அஞ்சும் நிலையில், எதற்கும் அஞ்சாமல் காவல் நிலைய வளாகத்தை நோக்கியே பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் யார் என்ற கேள்வி எடப்பாடி போலீசாருக்கு எழுந்தது.
இந்த நிலையில், குற்றவாளியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் தேடுதல் பணி தீவிரப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் எடப்பாடி காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது பழைய எடப்பாடி ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு மகன் ஆதித்யா என்பது தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த ஆதித்யாவை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், லாரி கிளீனரான தனக்கு சமூக வலைத்தளங்களை பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும், அதில் பலர் பிரபலமாக இருப்பதைக் கண்டு, தானும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதை பற்ற வைத்து காவல் நிலையத்தின் மீது வீசியதாகும் கூறியுள்ளார். இதனை அடுத்து ஆதித்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சொந்த ஊர்:
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான பழனிசாமியின் சொந்த ஊர் இது. அதனால்தான், தன்னுடைய பெயருக்கு முன்னர் அவர் எப்போதும் ‘எடப்பாடி’ என்ற தனது ஊரை போட்டுக்கொள்வார், அதுவே இப்போது அவரது அடையாளமாகி எடப்பாடி பழனிசாமி என்றே அவரை அனைவரும் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரின் காவல் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது என்று தொடர்ந்து பேசியும் அறிக்கை வெளியிட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சம்பவம் பேசுபொருளாக கிடைத்திருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)