'இதோ பாருங்க உங்க பணம்'..... முதியவரின் கவனத்தை திசைத்திருப்பிய திருடர்கள்... தஞ்சையில் அதிர்ச்சி
இதோ பாருங்க உங்கள் பணம் என்று கூறி கவனத்தை திசை திருப்பி தஞ்சையில் முதியவரின் பணப்பையை அபேஸ் செய்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை அருகே இதோ பாருங்க உங்கள் பணம் என்று கூறி கவனத்தை திசை திருப்பி முதியவரின் பணப்பையை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மானோஜிப்பட்டி கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் 65 வயதான சிவாஜி. இவர் கூட்டுறவு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் கரந்தையில் உள்ள ஒரு வங்கிக்கு கடன் தொகை செலுத்த தனது பைக்கில் ரூ.40 ஆயிரத்துடன் வந்தார். கரந்தை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனது பைக்குடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் சிவாஜியிடம் உங்கள் பணம் கீழே கிடப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பியுள்ளனர். சிவாஜி பணத்தை எடுக்க கீழே குனிந்த நேரத்தில் அந்த மர்ம நபர்கள் தனது பைக்கில் வைத்திருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் சிவாஜி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
நகை பறிப்பு சம்பவம்:
தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி கருடாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையன். கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி அருந்ததி (39). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று ராமையன் தனது மகள்களுடன் வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தார். அருந்ததி மட்டும் தனது மகனுடன் வீட்டின் முன்பக்கம் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அருந்ததியின் கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருந்ததி சங்கிலியை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு கணவர் மற்றும் மகன் சுதாரிப்பதற்குள் அந்த மர்மநபர் செயினை பறித்துக் கொண்டு ஏற்கனவே வெளியில் பைக்கில் தயாராக நின்றிருந்த மற்றொரு மர்ம நபருடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். திருடனுடன் போராடியதில் அருந்த்திக்கு கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் ராமையா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது ராமையா வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் ஏழரை பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்