Untouchability issue: தீண்டாமை விவகாரம்: பாரபட்சம் காட்டிய 5 பேரும் ஊருக்குள் நுழைய தடை - நெல்லை நீதிமன்றம் அதிரடி
சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்குவதில் தீண்டாமை காரணமாக பாரபட்சம் காட்டிய 5 பேரும் 6 மாத காலம் ஊருக்குள் நுழைய தடை விதித்து நெல்லை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சா குளம் கிராமத்தில் கடந்த பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் கடையில் தின்பண்டங்கள் வழங்க முடியாது என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பிய வீடியோ கடந்த 17 ஆம் தேதி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே இந்த தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அக்குழந்தைகளிடம் பாகுபாடு காட்டியது உறுதியானது. இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தாசில்தார் பாபு முன்னிலையில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது, பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் ராமசந்திர மூர்த்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
வீடியோவில் திரும்பி அனுப்பப்பட்ட குழந்தைகளும் புகார் தொடர்பான உண்மைகளை ஊடகங்களுக்கு தெரிவித்ததோடு அங்குள்ள பள்ளிகளிலும் பாகுபாடு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி தொடர்பாக புகார் கூறப்பட்டது ஆதாரமற்றது. முறையான விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுப்புலட்சுமி பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அவர் குழந்தைகளிடம் விசாரணை செய்தார். தொடர்ந்து இந்த புகாரில் தொடர்புடைய குமார், சுதா, முருகன் ஆகிய 3 பேர் என மொத்தமாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரை தேடி வரும் நிலையில் தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டதாக குற்றவாளிகளான மகேஸ்வரன், ராமசந்திரமூர்த்தி, குமார், சுதா, முருகன் ஆகிய 5 பேரும் 20.09.22 முதல் 6 மாத காலத்திற்குள் பாஞ்சாகுளம் ஊருக்குள் நுழைய தடை விதித்து வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். வன்கொடுமைக்கு எதிராக வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு தமிழகத்திலேயே அதுவும் நெல்லை மாவட்டத்தில் முதன்முறையாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்