சென்னை ஏர்போர்ட்: தபாலில் வந்த 105 MDMA மாத்திரைகள் பறிமுதல்
சென்னை விமான நிலைய சோதனைகளில் தங்கம் மட்டுமே அதிகமாக பிடிபட்டு வந்த நிலையில் சமீப காலமாக போதைப்பொருட்களும் கைப்பற்றபடுகிறது.
சென்னை விமான நிலையத்தின் அயல்நாட்டு தபால் அலுவலகத்திற்கு நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வந்த தபால்களை சோதனை செய்ததில் 5.25 லட்சம் மதிப்புள்ள 105 MDMA மாத்திரைகள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரமாநிலம் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து வந்த தபாலை பிரித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்ததில் HOERA! JIJ BENT JARIG என்ற டச்சு மொழியில் வாழ்த்து அட்டை இருந்தது. இது உங்களின் பிறந்தநாள், துரிதம் என்பது அதற்கான தமிழ்ப்பொருளாகும்.மேலும் அந்த கவரிலேயே இருந்த சில்வர் நிறத்தாலான சிறிய கவரை பிரித்ததில் 2.5 லட்சம் மதிப்புள்ள JURASSIS என்று எழுதப்பட்ட நீல நிறத்தாலான 50 MDMA மாத்திரைகள் இருந்தன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முகவரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த கவரை பிரித்ததில் 2.75 லட்சம் மதிப்புள்ள பிங்க் நிறத்தில் மண்டை ஓடு வடிவத்தாலான 55 MDMA மாத்திரைகள் இருந்தன. NDPS சட்ட பிரிவு 1985-இன் படி 5.25 லட்சம் மதிப்புள்ள 105 மாத்திரைகளையும் சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
MDMA மாத்திரைகள் என்றால் என்ன?
MDMA மாத்திரைகளை உட்கொண்ட 15 நிமிடங்களில் ரத்த ஓட்டம் வழியாக மூளைக்கு சென்று பரவசத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மருந்து மூளையில் உள்ள ஹார்மோன்களைத் தூண்டுகிறது, இது பாலியல் விழிப்புணர்வு, நம்பிக்கை, உணர்ச்சிபூர்வமான நெருக்கம் மற்றும் பிற பரவச பயனர்களுடன் பச்சாத்தாபம் போன்ற உணர்வுகளை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மாத்திரையின் விளைவுகளும் நேர்மறையானவை அல்ல. பரவசம் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இதயம் அல்லது இரத்த நாள பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும் தன்மை கொண்ட அபாயம் இதில் உள்ளது. அதீத போதை தன்மையால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அரபுநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்த நிலையில், கடந்த ஜூன் 4ஆம் தேதி கத்தார் நாட்டின் தோஹா நகர் வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பெண்களிடம் இருந்து 70 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் அயல்நாட்டு தபால் பிரிவு அலுவலகத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் தற்போது போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ள நிலையில் எல்லா பகுதிகளிலும் சோதனையை தீவிரப்படுத்த சுங்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர்.