Crime: சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை - சேலத்தில் பரபரப்பு
சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![Crime: சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை - சேலத்தில் பரபரப்பு salem crime North State youth was beaten to death in a dispute while driving TNN Crime: சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை - சேலத்தில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/19/8c324c7d54ba09ddb75d159f2c67b5b11674066724604189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலம் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் இங்கேயே தங்கி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாநகர், தாதகாப்பட்டி பகுதியில், மூனாங்கரட்டில் உள்ள முத்து குமார் என்பவரின் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குரு சரண் சகானி (32) என்பவர் கடந்த ஒன்றரை மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் குரு சரண் சகானி மற்றும் நிறுவனத்தில் உடன் பணிபுரியும் அனில் (30), ராகேஷ் (32), அஜய் (29), ஆலோ (28) ஆகியோர் சேர்ந்து, தாதகாப்பட்டி கேட், காளியம்மன் கோவில் அருகே உள்ள கடையில் மளிகைப் பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மூணாங்கரடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா (25), கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (28) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கு சாலையில் ஒதுங்கி ஓரமாக போக சொல்லி ஹாரன் அடித்து சத்தம் எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் நகர்ந்து வழிவிடாமல், தொடர்ந்து நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது சீனி என்பவன், தனது இரு சக்கர வாகனத்தை குரு சரண் சகானி மீது மோதியதால் கீழே விழுந்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு, வாக்கு வாதம், மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாவும், அப்போது ஆத்திரமடைந்த ராஜா, சீனிவாசன் இருவரும் சேர்ந்து குரு சரணை தாக்கி கீழே தள்ளி விட்டதில், அருகில் இருந்த தொட்டியின் மீது குரு சரண் விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த காவல் உதவி ஆணையர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் காவல்துறையினர், குரு சரணை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளர் முத்து குமார் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த அன்னதானப்பட்டி காவல்துறையினர், ராஜா, சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் ஏதாவது முன் விரோதத்தில் நடந்ததா? என அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார். பின்னர் சீனிவாசன், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)