Crime: சினிமாவை மிஞ்சிய மாஸ்டர் பிளான் கொலை... சேலத்தில் பரபரப்பு
அலுவலகத்தில் பதவி குறைக்கப்பட்ட அதிருப்தியில் நண்பர்களுடன் இணைந்து மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகர் குகை ஆறுமுகப்பிள்ளை கோவில் தெருவில் சேர்ந்த சேகர் என்பவர் மகன் கணேஷ். இவர் மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிரேடிங் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். சேலம் பெரமனூரில் இந்த கம்பெனியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த யுவராஜ், கருப்பூரை சேர்ந்த சந்தோஷ்குமார், ஆதிகேசவன் ஆகியோரும் வேலைசெய்து வருகின்றனர். இங்கு மண்டல மேலாளராக யுவராஜ் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தனது கம்பெனி புதிய கட்டிடத்திற்கு மாற்றிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு வந்த கணேஷ் வீட்டில் தாய் தந்தையிடம் பேசிவிட்டு உறங்க சென்றுள்ளார். நள்ளிரவில் தந்தையின் செல்போன் எண்ணிற்கு, கணேஷ் அறையில் இருந்து செல்போன் மூலமாக தன்னால் முடியவில்லை என்று கூறி அழைப்பு வந்துள்ளது. பின்னர் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டதாக கணேஷ் கூறிய நிலையில் தண்ணீர் குடித்தால் சரியாக விடும் என்று படுக்க வைத்துள்ளனர். மீண்டும் மீண்டும் பிரச்சினை எழும்பிய நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் நேரடியாக வருகை தந்து விசாரிக்க துவங்கியுள்ளனர்.
அதற்குள் கணேசுக்கு சுயநினைவு இழந்த நிலையில் காவல் ஆய்வாளர் தேவராஜன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விசாரணை துவங்கி நடத்தியுள்ளார். எவ்வாறு கணேஷின் உடலுக்குள் பூச்சிக்கொல்லி மருந்து வந்தது என்று பெற்றோரிடம் விசாரித்த போது ஃபுட் பாய்சன் தான் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்த நிலையில் காவல்துறையினருக்கும் குழப்பம் ஏற்பட்டது.
மற்றொருபுறம் அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது மேலாளருக்கும் இவருக்கும் சிறிய பிரச்சினை இருந்து வந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் மண்டல மேலாளர் யுவராஜ் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இடமும் விசாரணை நடத்தியபோது தான் எதுவும் செய்யவில்லை வீட்டிற்கு சரியான நேரத்தில் வந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதன் காரணமாக காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினருக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு மூன்று நாட்கள் தூங்காமல் முழுமையாக கணேஷ் வந்து சென்ற அனைத்து இடங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை நடத்தினர். இதை அடுத்து அவரது இல்லத்திற்கு சென்ற காவல்துறை அவரது அறை மற்றும் அவரது பெற்றோரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். இதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர் காவல் ஆய்வாளர் வேறொரு கோணத்தில் விசாரணை துவங்கினார். குறிப்பாக கணேஷ் வீட்டிற்கு வந்த நேரமும் அதேபோன்று சந்தேகிக்கும் அனைவர் வீட்டுக்கு சென்ற நேரத்தையும் அவர்களது கூறும் இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தபோது கணேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர் வீட்டிற்கு சென்ற நேரம் இரண்டும் ஒரே நேரமாக இருந்துள்ளது. மீண்டும் யுவராஜிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியும் எந்தவித ஆதாரமும் சிக்காத நிலையில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் யுவராஜ் கூறியபடி ஒரே மாதிரியாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து யுவராஜ் செல்போனை பறிமுதல் செய்து சோதித்துப் பார்த்தபோது, வேறு எந்த செல்போன் எண்ணுக்கும் பேசாதது போன்று காண்பித்துள்ளது. பின்னர் செல்போன் எண்ணை வைத்து சோதனை நடத்தியபோது அதிகநேரம் சந்தோஷ்குமார், ஆதிகேசவன் உள்ளிட்டோரிடம் அவர் பேசியது தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை வெளியாகிறது.
மண்டல மேலாளராக யுவராஜ் செய்யும் தவறுகளை, கணேஷ் மதுரையில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த அந்த கம்பெனியின் அதிகாரிகள் யுவராஜை கண்டித்துடன் அவருக்கான அதிகாரத்தை குறைத்துவிட்டனர். மேலும் ரமேஷிற்கு மேலாளர் பதவி உயர்வு வழங்கவும் முடிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் தன்னுடன் வேலைபார்த்து வரும் சந்தோஷ்குமார், ஆதிகேசவன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி கணேஷை தீர்த்தக்கட்ட திட்டமிட்டார். இதன்படி கடந்த 2 ஆம் தேதி மதுபார்ட்டி வைப்பதாக கூறி, கணேசை அழைத்து சென்று மதுவில் விஷயத்தை கலந்து கொடுத்தார். உடனே கணேஷ் உயிரிழந்து விடக்கூடாது. படிப்படியாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது போன்று இருக்க வேண்டும் என்று கூறி மெடிக்கல் ரெப் மூலமாக ஆலோசனை பெற்று, மாரியப்பன் என்பவர் மூலம் மருந்து வாங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு சென்ற கணேஷ் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலின் பெயரில் செவ்வாய்பேட்டை காவல் நிலைய தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பதிவில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து யுவராஜ், சந்தோஷ்குமார், ஆதிகேசவன், கருப்பூரை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரை கொலை முயற்சி வழக்கு பிரிவில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேஷ் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.