Crime: 23 வயசு தான் - 7 மாதங்களில் 25 திருமணங்கள், ஆட்டையை போடும் தில்லாலங்கடி - இதுதான் டார்கெட்?
Rajasthan Marriage Fraud: ராஜஸ்தானை சேர்ந்த 23 வயது இளம்பெண் 7 மாதங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 25 பேரை திருமணம் செய்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Rajasthan Marriage Fraud: குற்றம்சாட்டப்பட்ட அனுராதா பஸ்வான் என்ற பெண்ணை, போபாலில் வைத்து ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
7 மாதங்களில் 25 திருமணம்:
திருமண மோசடிகளில் நிகழும் நூதனமான சம்பவங்களின் வரிசையில், ராஜஸ்தானை சேர்ந்த 23 வயதே ஆன இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏழே மாதங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பேரை மணமுடித்து அவர் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. “லூட் & ஸ்கூட்” என அடையாளப்படுத்தப்படும் அனுராதா எனப்படும் அந்த பெண்ணை, போபாலில் வைத்து மதோப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் திருமண மோசடிகளில் ஈடுபட்ட அந்த பெண், திருமணத்திற்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, குறுகிய காலத்திலேயே அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.
திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட மோசடிகள்:
காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, ”அனுராதா தனது திட்டங்களையும், நடவடிக்கைகளையும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் திறம்பட செயல்படுத்தியுள்ளார். மணமகளாக தன்னை முன்னிறுத்தி, தேவையான ஆவணங்களை பயன்படுத்தி சட்டப்படி திருமணம் செய்துகொள்வார். சில நாட்கள் மட்டும் கணவருடன் தங்கியிருந்து, சரியான நேரம் பார்த்து கையில் கிடைக்கும் பணம், நகை மற்றும் மின்சாதன பொருட்களுடன் இரவோடு இரவாக அங்கிருந்து தப்பிச் சென்று விடுவார். இதையே வாடிக்கையாக கொண்டு கச்சிதமாக பல திருமணங்களை செய்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
ராஜஸ்தானின் சவாய் மாதோப்ப்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு சர்மா எனும் நபர் கடந்த மே 3ம் தேதி காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், “வரன் பார்த்து தரும்படி திருமண ஏஜெண்ட்களான சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகியோரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். அவர்கள் அனுராதாவை மணமகளாக எனக்கு அறிமுகம் செய்தனர். தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20ம் தேதி உள்ளூரில் உள்ள நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். ஆனால், மே 2ம் தேதியன்று வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்றுவிட்டார்” என விஷ்ணு சர்மா புகாரளித்துள்ளார்.
சிக்கியது எப்படி?
புகாரின்பேரில் விசாரணையை மேற்கொண்ட போலீசார், அனுராதாவால் பாதிக்கப்பட்ட பலரையும் அடையாளம் கண்டுள்ளனர். அதோடு, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பல மோசடி நபர்களின் விவரங்களும் தெரிய வந்துள்ளது. தேவையான தகவல்கள் அனைத்தையும் சேகரித்த பிறகு, காவலர் ஒருவரே மணமகள் வேண்டும் என கூறி திருமண ஏஜெண்டுகளை நாடியுள்ளார். அதன்படி, ஏஜெண்ட் ஒருவர் அனுராதாவின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் பகிர, உடனடியாக அவரை தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர். விசாரணையில் விஷ்ணுவிடம் இருந்து தப்பிச் சென்ற பிறகு அந்த பெண், போபாலில் உள்ள கப்பார் எனும் நபரை திருமணம் செய்து ரூ.2 லட்சம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
யார் இந்த அனுராதா?
உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, குடும்ப பிரச்னை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து போபாலில் குடியேறியுள்ளார். அங்கு தான், உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏஜெண்டுகள் வாட்ஸ்-ஆப் வாயிலாக மணமகள்களை அறிமுகப்படுத்தி, தங்களது சேவைக்கு லட்சக் கணக்கில் கட்டணம் வசூலித்துள்ளனர். அதன்படி, திருமணம் நடந்தும் ஒரே வாரத்தில் மணமகள் மணமகனை விட்டு ஓடிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.





















