சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை...!
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை புதுச்சேரி நீதிமன்றம் விதித்துள்ளது.
புதுச்சேரி சண்முகாபுரம் தெற்கு பாரதிபுரம் நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அன்பு என்பவரின் மகன் ரஞ்சித் குமார் (27). இவர் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரத்தில் டியூஷன் நடத்தி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு டியூஷன் படிக்க வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் பாலியல் வன்கொடுமை செய்து, வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ரஞ்சித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இது குறித்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதன்படி, போக்ஸோ சட்டத்தின் கீழ் ரஞ்சித் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, அபராதத்தை கட்டத் தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது, இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இச்சட்டப்பிரிவு சுறுக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது.
போக்சோ சட்டத்தின்படி வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, விசாரணை, வாக்கு மூலம் பதிவு செய்வது, வழக்கை நடத்துவது போன்ற அனைத்து செயல்பாடுகளிலும் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது
இச்சட்டத்தின்படி வன்கொடுமையால் “பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப்பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரிதான் அதனை பதிவு செய்ய வேண்டும்.
வாக்குமூலத்தை பதிவு செய்யுபோது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது. வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது. குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது என போக்சோ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.