Crime: வீரவநல்லூரில் துரத்தி துரத்தி ஒருவர் கொலை - நெல்லை அருகே பயங்கரம்
குளத்திற்கு அருகே துரத்தி துரத்தி பண்ணையார் குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் குமார். பண்ணையார் குமார் என்று அழைக்கப்படும் இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. மேலும் இவர் சொந்தமாக ஜே.சி.பி., லாரி உள்ளிட்டவை வைத்து தொழில் செய்து வருகிறார். காண்டிராக்டர் தொழிலும் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்திற்கு அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குமார் வசிக்கும் வீரவநல்லூரில் உள்ள திரௌவபதி அம்மன் கோவிலில் கடந்த 2 -ந் தேதி கால் நாட்டப்பட்டு கோவில் திருவிழா தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வருகிற (வெள்ளிக்கிழமை) நாளை நடைபெற இருக்கிறது. இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி திருவிழா நடைபெறும். குறிப்பாக இந்த கோவிலில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற திருவிழாவில் பண்ணையார் குமாரின் சமுதாய மண்டகப்படி திருவிழா நடைபெற்றது. அப்போது வெடி வெடிக்கும் போது அதே மண்டகப்படிதாரை சேர்ந்த சிலருக்கும், குமார் தரப்பினருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் அனைவரையும் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று மாலை பண்ணையார் குமார் வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வீற்றிருந்தான் குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பைக்கில் சென்று பண்ணையார் குமாரை குளத்தில் துரத்தி துரத்தி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். அந்த வழியாக சென்ற சிலர் இதனை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த வீரவநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இரத்த வெள்ளத்தில் சரிந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குமார் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக தான் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் முன்விரோதம் காரணமா இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளத்திற்கு அருகே துரத்தி துரத்தி பண்ணையார் குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.